வாங்காமலேயே வாங்கியதாக ரசீது... கல்வியிலும் ஊழல்!


அரசு கலை கல்லூரிகளுக்கு ஆய்வுகூட உபகரணங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் வழங்கிய
தண்டனையை  சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.


அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள ஆய்வு கூடங்களுக்கு ரசாயன பொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்வதற்காக கடந்த 1995ல் கல்லூரிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி இந்த பொருட்களை கூட்டுறவு சங்கங்கள மூலம் கொள்முதல் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், விழுப்புரம் கூட்டுறவு சங்கம், திண்டுக்கல் கூட்டுறவு சங்கம், திருவண்ணாமலை அண்ணாமலையார் கூட்டுறவு சங்கம் ஆகிய சங்கங்கள் பொருட்களை சப்ளை செய்ய முன்வந்தன.


இந்த பொருட்களை வாங்கித்தர கோவிந்தராஜன் என்ற தனி நபர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பொருட்களை வாங்காமலேயே 1995 மார்ச் 29 மற்றும் 30ம் தேதிகளில்  வாங்கியதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு இருப்பு கணக்கும் உருவாக்கப்பட்டது. அதற்காக கல்லூரிக் கல்வி இணை இயக்குனரிடம் ரூ. 56,36,187க்கு டிடி தரப்பட்டது.

அதன் பின்னர் ரூ.45,82,286 மதிப்புள்ள தரமற்ற பொருட்கள் சப்ளை செய்யப்பட்டன. இதற்கு அப்போதைய கல்லூரி கல்வி இயக்குனரும் ஒப்புதல் அளித்துள்ளார்.


இந்த முறைகேடு மூலம் அரசுக்கு  இழப்பு ஏற்படுத்தியதாக கல்லூரி கல்வி இணை இயக்குநர் காசிநாதன், விழுப்புரம் கூட்டுறவு சங்க தனி அதிகாரி பெருமாள், திண்டுக்கல் கூட்டுறவு சங்க தலைவர்   திருப்பதிராஜ், திருவண்ணாமலை அண்ணாமலையார் கூட்டுறவு சங்க தலைவர் கார்மேகம், கொள்முதல் அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் மீது காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் கூட்டுசதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது.இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையின்போது, 254 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அந்த நீதிமன்றம் கடந்த 2007 டிசம்பர் 27ல் அளித்த தீர்ப்பில், காசிநாதனுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தது. மற்ற 4 பேருக்கும் தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.இதனை எதிர்த்து 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்தனர். இதனிடையே 2009ல் காசிநாதன், 2010ல் பெருமாள் ஆகியோர் மரணமடைந்தனர்.


இதையடுத்து மற்ற மூவர் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், மேல் முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.மேலும் 3 பேரும் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஜூலை 4ஆம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.