தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அம்சங்கள் சேர்க்கப்படும் : அமைச்சர் தகவல்


தமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து சில அம்சங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


  சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் இன்பதுரை, தமிழக பள்ளி பாடத்திட்டங்களில் அரசியல் அமைப்பு குறித்து பாடம் சேர்க்கப்பட்டு மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கப்படுமா என வினவினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டப்பாடம் சேர்க்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சில அம்சங்களை பாடங்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதனால் பள்ளி மாணவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதற்காகவே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மற்றொரு உறுப்பினரின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் தூய்மையை மேம்படுத்த அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறினார். அனைத்து பள்ளிகளின் கழிப்பறைகளையும், மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் துாய்மைப்படுத்தி, ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் செங்கோட்டையன் குறிப்பிட்டார்.