நீட் பயிற்சி மையங்கள் துவங்குவது தொடர்பான அரசாணை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல்

சென்னை: நீட் பயிற்சி மையங்கள் துவங்குவது தொடர்பான அரசாணை
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மீண்டும் பொது நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வந்திருப்பதால் கடந்த 2 மாதங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான பயிற்சி மையங்கள் காளான்களைப் போல் வீதிக்கு வீதி முளைக்கத் தொடங்கிவிட்டன. எந்தப் பயிற்சி மையத்துக்கு நாடு முழுவதிலும் கிளைகள் உள்ளன, எதில் பயின்றவர்கள் அதிகம் வெற்றி பெற்றனர் என்று தேடிப்பிடித்து அவற்றின் வாசலில் பெற்றோர்கள் வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போது பல இணையதளங்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நீட் பயிற்சி அளிப்பதாக விளம்பரப்படுத்தி வருகின்றன. இந்தப் பயிற்சியில் விடியோ வழி பாடம், ஆன்லைன் டியூஷன், தேர்வுக் குறிப்பு, லைவ் சாட் எனப்படும் பயிற்றுநருடனான நேரடி உரையாடல், பயிற்சித் தேர்வு, கடந்த ஆண்டுகளின் கேள்வித் தாள்கள், மாதிரி கேள்வித் தாள்கள், கண்டிப்பாக இடம்பெறும் என்று கருதப்படும் வினா-விடைகள் ஆகியவை அடங்கும். இந்த வகை பயிற்சிக்கு குறைந்தபட்சம் ரூ.9,500 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும் என்று அறிவிப்புகள் கூறுகின்றன.


இந்நிலையில் நீட் எனும் மருத்துவ படிப்புகளுக்கான, தேசிய நுழைவுத்தேர்வு உட்பட, அனைத்து போட்டித் தேர்வுகளையும், பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ள, கல்வித்துறை சார்பில், இலவச பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு, மாவட்ட வாரியாக, சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசாணையை தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. ரூ.20 கோடியில் 412 ஒன்றியங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்- இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!