'டிமிக்கி' தருபவர்களுக்கு வருமான வரித்துறை கெடுபிடி

வருமான வரித்துறை, 'நோட்டீஸ்' பெறாமல், அடிக்கடி முகவரியை மாற்றி, 'டிமிக்கி' கொடுப்போருக்கு, கிடுக்கிப்பிடி போட, அத்துறை
முடிவெடுத்துள்ளது. அதன்படி, வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியை பெற்று, அதற்கு, நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: வரி ஏய்ப்பு செய்வோர், வரி பாக்கி வைத்திருப்போருக்கு, நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அதை ஏற்று, வரி செலுத்த நினைப்போர், நோட்டீசை பெறுகின்றனர். பலர், 'பான் கார்டு' மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் ஆவணங்களில், தவறான விபரங்களை தருகின்றனர். இன்னும் சிலர், அடிக்கடி முகவரி மாறுகின்றனர்; அதை, எங்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.அது போன்ற நேர்வுகளில், நோட்டீஸ் திரும்ப வந்து விடுகிறது; அதற்கேற்ற வரி வசூலிக்க முடிவதில்லை.

இதை தடுப்பதற்காக, வரித்துறை புதிய ஆணையை, டிச., 20ல் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருமான வரிச் சட்டம், 27ன் கீழ் அனுப்பப்படும் நோட்டீஸ், முகவரியில் ஆள் இல்லை என திரும்பினால், வங்கி, இன்சூரன்ஸ், தபால் நிலையம், உள்ளாட்சி அலுவலக பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களில் உள்ள முகவரி பெறப்பட்டு, அந்த முகவரிக்கு, 'நோட்டீஸ்' மீண்டும் அனுப்பப்படும். இவற்றில், ஏதேனும் ஒன்றில், அவர்கள் நிச்சயம் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது சிறப்பு நிருபர் -