வங்கி கணக்கு - ஆதார் இணைப்பிற்கான காலக்கெடு ரத்து

புதுடில்லி : வங்கி கணக்கு, பான் கார்டு, மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில், 5 நீதிபதிகள் பெஞ்ச் முன் நாளை விசாரணைக்கு
வருகிறது. இந்நிலையில், வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
வங்கிக்கணக்கு, காப்பீடுகள் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்த ஆண்டு டிசம்பர் 31 கடைசி நாள் என மத்திய அரசு கூறி இருந்தது. ஆனால், இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த காலக்கெடுவை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது. மேலும், புதிய காலக் கெடு பின்னர்அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வங்கி கணக்கு துவங்குவது உள்ளிட்டவற்றிற்கும் ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால், வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதால், தற்போது டிசம்பர் 31 என நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் தலையீட்டை அடுத்து மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018 ம் ஆண்ட மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது