• 6:38 PM
  • www.tntam.in
இப்போதெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களிலும், சாலையில் நடந்து செல்லும்போது வழிமறித்து கொடுக்கப் படுகிற துண்டு பிரசுரங்களிலும்,  ‘பணியில் இருக்கும்போதே பகுதி நேரமாக தொழில் செய்யலாம்என்ற கவர்ச்சி கரமான வாக்கியங்களைப் பார்க்கிறோம். அது எப்படிப்பட்ட தொழிலாக இருந்தாலும் அரசுத்துறை முதல், தனியார் துறை வரை எதில் பணிபுரியும் ஊழியராக இருந்தாலும் அவரை அது கவரவே செய்கிறது.

பல தனியார் நிறுவனங்கள் வேலை வாய்ப்பு குறித்த ஒப்பந்தம் செய்யும் பொழுதே பகுதிநேரமாகவோ, முழு நேரமாகவோ எந்த தொழிலும் ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என்று எழுத்துப்பூர்வமாக சொல்லிவிடுகின்றனர். அதை மீறும்போது வேலை இழப்பு வரை பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

பொதுவாக தனியார் நிறுவனங்களில் இது அவ்வளவாக கண்காணிப்படுவது இல்லை. எனவே, எம்.எல்.எம்., சந்தைப்படுத்துதல் முதலிய பல்வேறு பகுதிநேர தொழில்களில் பல தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

ஆனால், இதுவே அரசு ஊழியராக இருந்தால் பிரச்சனை கொஞ்சம் பெரிது தான். தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 1973-ன் படி ஒரு தமிழக அரசு ஊழியர் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ தொழில், வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. ஆனால், தங்களது கலைத்திறனை அவர்கள் வெளிப்படுத்தலாம். அதன்மூலம் கிடைக்கும் வருவாயை கணக்கில் காட்டலாம். அதற்கு தடையில்லை.

எடுத்துக்காட்டாக ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர், கவிதை எழுதும் திறனுடன் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் தனது கவிதையைப் புகழ்பெற்ற ஒரு வார இதழுக்கு அனுப்பி அதற்கு சன்மானமாக ரூ.1000 பெறுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அது சட்டவிரோதம் ஆகாது. காரணம், அது அவரது கலைத்திறனுக்கு கிடைத்த சன்மானம். எனவே அத்தொகைக்கு விதிவிலக்கு உண்டு. மாறாக, அவர் ஒரு பத்திரிகையை தொடங்கி நடத்தினால் அது சட்டவிரோதம்.

ஏனென்றால் பத்திரிகையின் உரிமையாளர்தான் பதிப்பாளர். அதன் லாபம் அனைத்தும் அவருக்கே போய்ச்சேரும். அதனால் பத்திரிகை நடத்துவது என்பது தமிழக அரசு ஊழியர் நடத்தை விதிகளை பொறுத்தவரை சட்ட விரோதமே. அரசு ஊழியர்கள் நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்யலாமே ஒழிய பங்கு வர்த்தகம் செய்யக் கூடாது. அதேநேரத்தில் பரம்பரையாக விவசாய நிலத்தை கொண்டிருக்கும் ஒரு அரசு ஊழியர் விவசாயத்தின்மூலம் வருவாய் ஈட்டுவதை சட்டம் தடுப்பதில்லை.

இவ்விதிகளின்படி ஒரு குறிப்பிட்ட அரசு ஊழியர் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தன்னுடைய மற்றும் குடும்ப உறுப்பினர்களது சொத்து விவரங்களை துறைத்தலைவருக்கு தெரிவித்தாக வேண்டும். அதாவது அரசு ஊழியர் களின் வருவாய்  விவரங்கள் முழுக்க முழுக்க அரசால் கண்காணிக்கப்படுகின்றன. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு அரசு ஊழியர் சொத்து சேர்த்துவிடக்கூடாது என்பது தான் இந்த  விதிகளின்  நோக்கம்.

மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை எந்த ஒரு குடிமகனும் அரசுக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும் என்பதால் எந்த அளவிற்கு அரசு ஊழியர்கள் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடியும்.


அப்படி என்றால் ஒரு அரசு ஊழியர் தொழில் செய்யும் திறனோடு இருந்தால் அவர் அதை  செய்வதற்கு வாய்ப்பே இல்லையா என்கிறீர்களா? பணியில் இருக்கும்போது நிச்சயமாக வாய்ப்பு இல்லை. பணியிலிருந்து அவர் விலகினால் மட்டுமே அவர் தொழிலோ, வணிகமோ செய்யலாம்.

Wikipedia

Search results

Total Pageviews

Search This Blog

Follow by Email

join with face book

join with face book
facebook address- tamdgl

My Blog List

WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in )

Blog Archive