புதிய பாட திட்டம்: கருத்துக்கூற கூடுதல் அவகாசம்?

பள்ளிக்கல்வியின் புதிய பாடத்திட்ட வரைவு குறித்து, கருத்து தெரிவிக்க, கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்று முதல் பிளஸ் வரையிலான, புதிய
பாடத்திட்டத்துக்கான வரைவு அறிக்கை, நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அறிக்கையின் முழு விபரமும், www.tnscert.org என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, 28க்குள் கருத்து தெரிவிக்கும்படி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வரைவு அறிக்கையை, பொது பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். அதே நேரம், பாடத்திட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிக்க, கூடுதலாக அவகாசம் வழங்க வேண்டும் என்றும், கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:
தாய் மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆங்கிலம் சிறப்பாக கற்றுத்தரப்படும் என்பது நல்ல அம்சம். பாலின சமத்துவம், மதிப்பீட்டு முறை மாற்றம், வெளிநாடு வாழ் தமிழர்களின் படைப்புகளை பாடத்திட்டத்தில் சேர்த்தல் போன்றவை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பள்ளி மதிப்பீட்டு முறைகளில், மாற்று வழி வருவது பாராட்டத்தக்கது; இது, நல்ல துவக்கம். இதன் பயனை முழுமையாக பெற, கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை, ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதேநேரத்தில், புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, புத்தகம் எழுதும் பணிகள் துவங்கி உள்ளன.

இப்பணியில், மாநிலம் முழுவதும், பல்வேறு பள்ளிகளில் தேர்வு செய்யப்பட்ட, 350 ஆசிரியர்களும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர். ஜனவரிக்குள் புத்தகங்களை இறுதி செய்தால் மட்டுமே, ஏப்ரலில் அச்சடித்து, ஜூன், 1ல், மாணவர்களுக்கு வழங்க முடியும். எனவே, இந்த பணியில், இன்னும் அதிக அளவு தனியார், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி பேராசிரியிர்கள், கற்பித்தல் சாராத பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கூடுதல் ஆட்கள் நியமிக்கப்பட்டால், பணிகளை விரைந்து முடித்து, இறுதி நேர தவறுகளை சரிசெய்ய முடியும் என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்