’டெட்’ முடித்தவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பணி !

பள்ளிகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல்ஆசிரியராக பணிபுரிவோர் குறித்த தகவல்களை திரட்டுமாறு, இயக்குனர் கார்மேகம், தொடக்க கல்வி
அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தேசிய ஆசிரியர் கல்விக்குழும ஆணைப்படி, ஐந்தாம் வகுப்பு வரை, பாடம் எடுக்கும் ஆசிரியர், மேல்நிலை வகுப்பில், குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், ஆசிரியர் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இதேபோல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்க, இளங்கலை கல்வியியல் படிப்புடன், பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதோடு, ஆசிரியர் தகுதித்தேர்விலும்(டெட்) தேர்ச்சி பெற வேண்டுமென, 2010 ஆகஸ்டில் மத்திய அரசு அரசாணை வெளியிட்டது.

தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள், 2011 ன் படி, மத்திய அரசு உத்தரவு ஏற்கப்பட்டது. எனவே, பள்ளிகளில் பணிபுரிய, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகிறது.

ஆனால், அரசு வேலை பெற மட்டுமே, டெட் தேர்வு எழுத வேண்டுமென்ற, தவறான புரிதல் உள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை போல, சுயநிதி பள்ளிகளிலும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே, பணியில் அமர்த்த வேண்டுமென, தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து பள்ளிகளிலும், ஆசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்யுமாறு, தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில்,’டெட் தேர்வில் தேர்ச்சி பெற, 2019 வரை கால அவகாசம் உள்ளது. இதற்குள், ஆசிரியர் பணிக்கான அனைத்து குறைந்தபட்ச தகுதிகளையும், பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சுயநிதி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரியப்படுத்தியுள்ளோம்.


புதிதாக பணியில் சேர்ந்தோர், கட்டாயம் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம். எனவே, அனைத்து வகை பள்ளிகளிலும் பணிபுரியும், ஆசிரியர்களின் கல்வித்தகுதி விரைவில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்என்றனர்.