8வது ஊதியக்குழுவில் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய கோரி தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம். ஜாக்டோ ஜியோ அறிவிப்பு


சிவகங்கை: அரசு ஊழியர் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோஜியோ சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துதல், தொகுப்பூதிய, மதிப்பூதிய நியமனங்களை ரத்து செய்தல், ஏழாவது ஊதியக்குழுவை அமுல்படுத்துதல் மற்றும் நீட் தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப். 7ம் தேதி முதல் 9
நாட்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். இதனால் தமிழக அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கியது. இந்நிலையில் நீதி மன்றம் தலையிட்டதால் கோராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து கடந்த செப்.15 பிற்பகல் முதல் அனைவரும் பணிக்கு திரும்பினர். நீதிபதிகள் தலைமைச் செயலாளரை நீதி மன்றத்தில் நேரடியாக ஆஜராக செய்து சில உறுதி மொழிகளை பெற்று தந்தனர். அதனடிப்படையில் 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை பெற்று தமிழக முதல்வர் அவர்கள் புதிய ஊதிய உயர்வினை அறிவித்தார்கள். இந்த அறிவிப்பில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அரசு ஊழியர் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாக பல்வேறு சங்கங்கள் தமிழக அரசுக்கு புகார் மனு அனுப்பினர். இந்நிலையில் ஊதிய முரண்பாடுகளை களைந்து புதிய அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்து சிவகங்கை மாவட்ட ஜாக்டோஜியோ தொடர்பாரள்கள் தமிழரசன், இளங்கோ, முத்துப்பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் 9 நாட்கள் பல்வேறு போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக நீதி மன்றத் தடையையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இதில் மாநிலம் முழுமைக்கும் சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்ட அரசூழியர், ஆசிரியர், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த 8வது ஊதியக்குழு மாற்றம் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுமைக்கும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திடும் வகையில் நவம்பர் 30க்குள் குழுவின் அறிக்கையை பெற்று அறிவித்திட வேண்டும், இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படாத சத்தணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் போன்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 8வது ஊதியக்குழுவில் வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24.11.2017, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும், இதில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்பார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.