பொது நிகழ்ச்சியில் மாணவர் பங்கேற்க 55 கட்டுப்பாடுகள் : அரசியல் நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை

பள்ளி மாணவர்களை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்க, 55 நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. அரசியல் நோக்கம் கொண்ட
நிகழ்ச்சிகளில், மாணவர்களை அழைக்க அனுமதிஇல்லை என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பொது,நிகழ்ச்சியில்,மாணவர்கள்,பங்கேற்க,55கட்டுப்பாடுகள்,அரசியல்,நிகழ்ச்சிக்கு,அனுமதி,இல்லை


தமிழக அரசின், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குனர், பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அரசியல் நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க, உயர் நீதிமன்றம் தடை விதித்ததோடு, ஒருங்கிணைப்பு கமிட்டி அமைத்து, வழிகாட்டுதல் வழங்க உத்தரவிடப்பட்டது.


பின், அரசின் சார்பில், பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் தலைமையில், தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம், உறுப்பினர் செயலராக, 16 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப் பட்டது.இந்த கமிட்டியின் பரிந்துரைகளை, 55 கட்டளைகளாக, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:


* மாவட்ட அளவில் கலெக்டரும், மாநில அளவில் கல்வித்துறை இயக்குனர்களும், மாணவர்களின் பங்கேற்புக்கு அனுமதி அளிக் கும் அதிகாரம் உள்ளவர்கள். அவர்களுடன், மாவட்ட கல்வி அதிகாரிகள், இணைந்து செயல்பட வேண்டும்


* அரசியல் நோக்கம் உள்ள எந்த நிகழ்ச்சிக்கும், மாணவர்களை அழைத்து செல்ல அனுமதி இல்லை. வகுப்புகள், தேர்வு பாதிக்கும் நாட்களில் மாணவர்கள், பொது நிகழ்ச்சிக்கு செல்ல அனுமதி இல்லை


* அரசியல்வாதிகளை வாழ்த்தவோ, வழியில் நின்று வரவேற்கவோ அனுமதி கூடாது.


நிகழ்ச்சி துவங்கும் முன், ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக, மாணவர்களை காத்திருக்க வைக்கக் கூடாது


* தேசிய, மாநில முக்கியத்துவமான நாட்களை தவிர, மற்ற விடுமுறை நாட்களில் பொது நிகழ்ச்சிகளில், மாணவர்கள் பங்கேற்க முடியாது


* போராட்டம், வேலை நிறுத்தத்திற்கு மாணவர் களை பங்கேற்க வைக்க அனுமதி இல்லை. உடல் நலம் பாதித்த மாணவர்களுக்கு அனுமதி இல்லை. போக்கு வரத்து நெருக்கடி உள்ள பகுதிகளின் பேரணியில், மாணவர்கள் பங்கேற்கக் கூடாது


* மாணவர்கள் புறப்படும் இடம் முதல், வீடு திரும்பும் வரை, பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்ள வேண்டும்


* கூட்டத்தை ஒழுங்குபடுத்த, மாணவர்களை தன்னார்வலர்களாக பயன்படுத்தக் கூடாது. போலீஸ் வாகனங்களில், மாணவர்களை அழைத்து செல்லக்கூடாது. தீயணைப்பு துறையினர், தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்


* மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அதிகாரி கள் அனுமதிக்காத நிகழ்ச்சிகளுக்கு, மாணவர்கள் செல்ல, பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது

* மாணவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப் பான குடிநீர், சிறு உணவு, போக்குவரத்து வசதி களை, பள்ளி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்


* குடிநீர், கழிப்பறை வசதி, நிகழ்ச்சி நடக்கும் கட்டடத்தின் உறுதித்தன்மை போன்ற அடிப்படை கட்டமைப்புகளை, பொதுப்பணித் துறை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சித் துறை, சுகாதார வசதிகளை மேற்கொள்ள வேண்டும்


* சுகாதாரத் துறை சார்பில் போதிய மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவ முதல் உதவி வசதி ஏற்படுத்தவேண்டும்; ஆம்புலன்ஸ் வசதியிருப்பது கட்டாயம்


* உரிய உரிமம் பெற்ற வாகனங்களையும், டிரைவர் களையும் மட்டுமே, மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்த வேண்டும். முன், பின் பகுதி யில் மாணவர் பாதுகாப்புக்கு ஆசிரியர்கள் இருக்க வேண்டும். முதல் உதவி பெட்டி வாகனத்தில் கட்டாயம்


* அரசு தனியாகவும், தனியாருடன் இணைந்தும்
நடத்தும் நிகழ்ச்சிகளில், மாவட்ட கலெக்டர் அனுமதியுடன், மாணவர்களை பங்கேற்க வைக்கலாம்.


* மாணவர்களின் ஒழுக்கம், திறன்களை வளர்க்க உதவும் நிகழ்ச்சிகள், மாணவர்கள், ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிகள், சமூக ரீதியாக பொது விழிப்புணர்வு நிகழ்ச்சி களுக்கு அனுமதி அளிக்கலாம்


* விருப்பம் இல்லாத மாணவர்களை கட்டாயப் படுத்தகூடாது. பெற்றோருக்கு முன் கூட்டியே அறிவிக்க வேண்டும். அவர்களும் நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால், அனுமதிக்க வேண்டும்


* வெயில், மழை போன்ற இயற்கை நிகழ்வு களால், மாணவர்கள் பாதிக்கப்படாமல் அனுமதி அளிக்க வேண்டும். மோசமான வானிலை இருந்தால், அனுமதி கூடாது


* மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு போக்குவரத்து, இட வசதிகள் தேவை. மாணவர் களுடன் செல்லும் ஆசிரியர்கள், மாணவர் களின் தொடர்பு எண்களை வைத்திருப்பது அவசியம்


* மாணவியருக்கு, 20க்கு ஒன்று என, பெண் ஆசிரியைகள் உடன் செல்ல வேண்டும். மாணவர்கள் அடையாள அட்டை அணிவது அவசியம்* நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களை, சம்பந் தப்பட்ட பள்ளி ஆசிரியர் மற்றும் பாதுகாவலர் இன்றி, தனியே வெளியே விடக்கூடாது. மாலை, 6:00 மணிக்கு மேல், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில், மாணவர்கள் இருக்கக்கூடாது. இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன.