கல்வியை இழக்கும் மலைவாழ் முதல் பட்டதாரிகள்! - கோரிக்கையை ஏற்குமா அரசு?

ஈரோடு மாவட்டம் தமிழகத்திலேயே அதிக பரப்பளவு காடுகளை கொண்ட மாவட்டமாக இருந்து வருகிறது. இந்த காடுகள் சத்தியமங்கலம், தலமலை, பர்கூர், அந்தியூர் ஆகிய நான்கு சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த
மலைப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்தியூர் தாலுகாவிற்கு உட்பட்ட பர்கூர் பகுதியில் 33 கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்களின் குழந்தைகள் கல்வி பயில ஓசூர் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லவேண்டிய சூழல் இருக்கிறது. அடர்ந்த வனப்பகுதியாக இருக்கக்கூடிய அந்த பகுதியிலிருந்து பள்ளிக்கு வர அரசின் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித் தராததால், வனப்பகுதிலிருந்து மாணவர்கள் பள்ளிக்கு அச்சத்துடன் சென்று வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே காரணத்தால் முதல் பட்டதாரி குழந்தைகள் பாதியிலேயே பள்ளி படிப்பை விடவேண்டிய நிலையும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் பள்ளிக்கு வந்து செல்ல மலைப்பகுதி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கக்கோரி ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதாவை நேரில் சந்தித்த மாணவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்.
 
இதுகுறித்து சுடர் அமைப்பைச் சேர்ந்த நடராஜினடம் பேசும்போது, “மலைப்பகுதியிலிருந்து பள்ளிக்கு செல்ல பெரிய செங்குளம் 7 கிமீ, கொங்காடை 10 கிமீ, சுண்டை பூடு பெரியூர் 12 கிமீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. மலை கிராமங்களிலிருந்து கல்லூரிக்கு செல்லும் பெரும்பாலான மாணவர்கள் முதல் பட்டதாரிகளாக இருக்கின்றனர். போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவர்கள் இடையிலேயே கல்வியை விடவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆண்கள் பள்ளியில் இருந்து இடையில் நின்றால் வேறு ஏதாவது வேலைக்கு சென்று விடுகிறார்கள். பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதனால் பட்டதாரிகள் உருவாகக்கூடிய சூழலே இல்லாமல் போகிறது. 11, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் சைக்கிள் வழங்கப்படும் விதியை தளர்த்தி மலைப்பகுதி மாணவர்களுக்கும் சைக்கிள்கள் வழங்க வழிவகை செய்யவேண்டும்என கோரிக்கை விடுக்கிறார்.


மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா வழங்கப்பட்ட கோரிக்கை மனுவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ள நிலையில், மலைப்பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.