மினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி முதியோர் பென்ஷனில் அபராதம் வசூலிக்க வங்கிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு

மினிமம் பேலன்ஸ் இல்லையெனக்கூறி, முதியோர் மற்றும் விதவை
உதவித்தொகையில் அபராதம் பிடித்தம் செய்ய ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.மதுரை அருகே ஒய்.நரசிங்கம் கிராமத்தை சேர்ந்த வக்கீல் லூயிஸ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:


 நெல்லையை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு வழங்கப்பட்ட பென்ஷனில் ரூ.350 பிடித்தம் செய்துள்ளனர். இதுகுறித்து  மூதாட்டி விசாரித்தபோது, அவரது வங்கி கணக்கில் குறைந்தபட்ச பணம் இருப்பு இல்லையென்பதால் பிடித்தம் செய்ததாக கூறியுள்ளனர்.

உதவித்தொகையை முழுமையாக வழங்க வேண்டுமென அவர் கோரிக்ைக விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடந்த 3 மாதங்களில் இதுபோல அரசு வங்கிகளில் 3 கோடிக்கும் அதிகமான கணக்குகளிலிருந்து ரூ.235 கோடி வரை அபராதமாக பிடித்தம் செய்துள்ளனர்.

முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறுவோரின் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்பதற்காக அபராதமாக பணம் பிடித்தம் செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஜெ.நிஷாபானு ஆகியோரது அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘வருமானமின்றி வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்குதான் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதிலும் பிடித்தம் செய்வது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்என்றார்.


இதையடுத்து, ‘முதியோர் மற்றும் விதவை உதவித்தொகைகளில், குறைந்தபட்ச பணம் இருப்பு இல்லையென்பதற்காக பணம் பிடிப்பது எதேச்சதிகாரம்எனக்கூறிய நீதிபதிகள், வங்கிகளில் அபராதமாக பணத்தை பிடித்தம் செய்ய இடைக்காலத்தடை விதித்து விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர். மனுவிற்கு ரிசர்வ் வங்கி தலைவர்மத்திய நிதித்துறை இணை செயலர், தமிழக சமூக நலத்துறை செயலர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளனர்.