புதிய சட்டம் வருகிறது போர்வெல் போட திடீர் கட்டுப்பாடு

தமிழகத்தில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால் நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து தமிழக
அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 30 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. அதுவும் 400 முதல் 600 அடிக்கு கீழ் சென்று விட்டது. இந்நிலையில், பொதுப்பணித்துறை நீர் ஆய்வு நிறுவனம்-ஐஐடி உடன் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அதில், நிலத்தடி நீர் மட்டம் வரைமுறை இல்லாமல் பயன்படுத்தப்படுவதாலும், அதிகபட்ச ஆழத்தை போட்டு வணிக ரீதியாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாலும் நீர் மட்டம் சரிவுக்கு முக்கிய காரணம் என்பது ெதரிய வந்தது.

இதை தொடர்ந்து நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு குடிநீர் பற்றாக்குறை அதிகமாக இருந்ததால் நிலத்தடி நீர்அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதை தடுக்க தமிழ்நாடு நிலத்தடி நீர் சட்டம் 2003 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின்படி குறு, சிறு விவசாயிகள், விவசாய தேவைக்காக நிலத்தடி நீரை பயன்படுத்த இந்த சட்டம் தடை விதித்தது.

மேலும் தனியார் லாரி மூலம் நிலத்தடி நீரை எடுத்து சென்றால் நிலத்தடி நீர் ஆணையத்திடம் முன் அனுமதி வாங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு இருந்ததால் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. எனவே, நிலத்தடி நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதற்காக, புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை பரிந்துரை செய்துள்ளது.


இந்த சட்டம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அபாயகரமான, மிகவும் அபாயகரமான பகுதிகளில் வணிக பயன்பாட்டிற்கு நிலத்தடி நீர் எடுக்கப்படுவது முற்றிலுமாக தடுக்கப்படும். அதே நேரத்தில் தனி வீடு, 6 குடியிருப்பு கொண்ட அடுக்கு மாடி வீடுகளை தவிர்த்து, அதற்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டாயம் அனுமதி பெற்று போர்வெல் போட வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.