சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது!-தமிழக ஏழாம்வகுப்பு மாணவர் பெயர் பரிந்துரை.நா வழங்கும் சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருதுக்குத் தமிழத்தில் இருந்து நரிகுறவர்
இனத்தைச் சேர்ந்த மாணவர் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவர் சக்தி (12). இவர் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 5 சகோதர, சகோதரிகள் உள்ளனர்.

பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த சக்தி, ஆசிரியர்களும், மாணவர்களும்
தன்னைச் சரியாக நடத்தவில்லை என 8 வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார். பின்னர் ஊசி, பாசி விற்கும் தொழிலைத் தனது பெற்றோருடன் இணைந்து செய்துவந்தார். சில சமயங்களில் பிச்சையும் எடுத்துள்ளார்.

2014ஆம் ஆண்டு ஹேண்ட் இன் ஹேண்ட் (Hand in Hand) என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்குக் கல்வி அளிக்க முன்வந்தது. நரிக்குறவ மக்களைச் சந்தித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்தது. அப்படிப் பள்ளிக்குச் சென்ற மாணவர்களில் சக்தியும் ஒருவர். அரசின் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் சிறுவர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்பட்டது.

விடுமுறை நாட்களில் ஊசி மணி விற்கச் செல்லும் அவர், தங்கள் இனக் குழந்தைகளிடம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டி, அது குறித்து அவர்களது பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார். அப்படி 25 மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்துள்ளார். மேலும், பல மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைக்கும் முயற்சியில் ஈடுபடுள்ளார். இதனால் ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனம், .நா.வின் 2017 சர்வதேசக் குழந்தைகள் அமைதிக்கான விருதுக்கு சக்தியின் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறது.


ஹேண்ட் இன் ஹேண்ட் தொண்டு நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் கல்பனா சங்கர், “இது சக்திக்கான மாற்றம் மட்டுமல்ல. தன் இனத்தைச் சேர்ந்த 25 மாணவர்களைப் பள்ளிக்கு வரவைத்து ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான். அது அவ்வளவு எளிதான கரியம் அல்ல. எனவே 2017ஆம் ஆண்டுக்கான சர்வதேச அமைதிக்கான விருதுக்கு சக்தியின் பெயரைப் பரிந்துரை செய்துள்ளோம். சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது ஆண்டுதோறும் குழந்தைகளின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு வழங்கப்படும். பாகிஸ்தானில் பெண் கல்வி குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்ட மலாலா இந்த விருதைப் பெற்றிருக்கிறார். இந்த விருதுக்கு 169 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதில் சக்தி இளையவர். சக்தி தற்போது விடுதியில் தங்கி காஞ்சிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மென்பொருள் பொறியாளர் ஆக வேண்டும் என்பதே அவரது கனவுஎனத் தெரிவித்துள்ளார்.