ஏழாவது ஊதியக் கமிஷன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி 30% ஊதிய உயர்வு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி

ஏழாவது ஊதியக் கமிஷன்படி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி 30% ஊதிய உயர்வு தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், பணிநிரந்தரம் செய்யும்வரையில் குறைந்தபட்சமாக ரூ.18000 மாத சம்பளம் நிர்ணயம் செய்து, அனைத்து வேலைநாட்களிலும் பணிவழங்கி, சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டியும், தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கடலூரில் மாநில செயற்குழு கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் திரு.பா.ஆரோக்கியதாஸ் தலைமையேற்று சிறப்புரை ஆற்றி பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, பகுதிநேர ஆசிரியர்களை சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்துவதற்கு வரும் நவம்பர் 3வது வாரத்தில் அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை சார்பில் தமிழக முதல்வர், துணை முதல்வர், பள்ளிக்கல்வி அமைச்சர்களை அழைத்து சென்னையில் மாநாடு நடத்தப்படும் என்றார்.

கடலூர் மாவட்ட நிர்வாகிகள் பாக்யராஜ், சத்யராஜ், பெருமாள், பாஸ்கர், ரேவதி, புவனேஸ்வரி, கீதா, இளவரசன், சக்திவேல், முத்துக்கிருஷ்ணன்  உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர். புதுக்கோட்டை மாவட்ட பழனவேல், தர்மராஜ், அருளப்பன், திருவண்ணாமலை மாவட்ட லோகநாதன், பெரம்பலூர் மாவட்ட சிவமுருகன், சுரேஷ்குமார், விழுப்புரம் மாவட்ட அன்பரசன், லெனின், ராமதாஸ், ஆனந்தன் நன்றி அறிவிப்பு மாநாடு குறித்து அறிவுரை கூறினார்கள். கடலூர் மாரிமுத்து இறுதியில் நன்றியுரை வழங்கினார்

இக்கூட்டத்தை பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் வரவேற்று விளக்கவுரை ஆற்றினார். இக்கூட்ட முடிவு குறித்து பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் கூறியதாவது அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அமரர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 2012ல் தொகுப்பூதிய அடிப்படையில் பகுதிநேரமாக பணியமர்த்தப்பட்டோம். ஆரம்பத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.5000 தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சென்ற நிலையில் முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு 2014ல் ரூ.2000 ஊதியம் உயர்த்தி முன்தேதியிட்டு நிலுவைத் தொகையுடன் வழங்க அமரர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு இரண்டாவது ஊதிய உயர்வானது, தற்போது ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.700 ஊதியம் உயர்த்தி தற்போதைய முதல்வர் பழனிச்சாமி அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் பகுதிநேர ஆசிரியர்களின் தொகுப்பூதியம் ரூ.7700ஆக தற்போது உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஏழவாது ஊதியக்குழு பரிந்துரையை ஏற்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணை 303ன்படி பகுதிநேர தொகுப்பூதிய திட்ட வேலையில் உள்ளவர்களுக்கு 30% ஊதிய உயர்வானது வழங்கப்பட்டுள்ளதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பகுதிநேரமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் 15000க்கும் மேலான பகுதிநேர ஆசிரியர்களுக்கும் சுமாராக ரூ.3000 உயர்த்தி மொத்தமாக ரூ.10000வரை இனி மாத தொகுப்பூதியமாக கிடைக்கும் என மூன்றாவது முறையாக ஊதிய உயர்வை பெற இருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள் மகிழ்ச்சியுடன் அரசின் இந்த முடிவை வரவேற்கின்றனர்

மேலும் ஆறு ஆண்டுகளாக பகுதிநேரமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிந்துவரும் பகுதிநேர ஆசிரியர்களை விரைவில் தமிழக அரசு அரசுப் பணிக்கு மாற்றிட, முதல்கட்டமாக சிறப்புகாலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட இக்கூட்டத்தின் வாயிலாக அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர். ஒன்றியத்திற்குள் அனைவருக்கும் பணிமாறுதல், பெண் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு காலவிடுப்பு, இறந்துபோனவர்களுக்கு இழப்பீடு போன்ற நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக அறிவிப்புகளை வெளியிட அரசை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் அமரர் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் 26.08.2011ல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 110ன்கீழ் 16549 பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 99 கோடியே 29 இலட்சம் ரூபாய் செலவு ஏற்படும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளபடி அனைத்து மாதங்களுக்கும் தொகுப்பூதியம் வழங்காமல் மே மாதம் ஊதியம் மறுத்து வருவதால் 6 மே மாதங்களுக்கும் ஒவ்வொருவரும் ரூ.38000 இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இழந்துவரும் மே மாத ஊதியத்தை வழங்கவேண்டும் என்றார் அவர்.