ரூ.20 கோடிக்கு 30 சதவிகிதம் கமிஷன்! - கதிகலக்கும் கல்வித்துறை சிண்டிகேட்-Vikatan

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட இருக்கும் ஆய்வக உபகரணங்களில் ஊழல் அரங்கேறி வருவதாகக் கொதிக்கின்றனர் ஆசிரியர்கள். '20 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட இருக்கும்
திட்டத்துக்காக 30 சதவிகித கமிஷன் பேரங்கள் தொடங்கியிருக்கின்றன. இதனால் தரமான உபகரணங்கள் வழங்கப்படுமா என்ற சந்தேகம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது' என்கின்றனர் கல்வியாளர்கள்.

 DPI

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.) செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ஆய்வக உபகரணங்கள், நூலக புத்தகங்கள், புதிய கட்டடங்கள், நாற்காலிகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரையில் மத்திய அரசு நிதி ஒதுக்கியிருக்கிறது. "மத்திய அரசு வழங்கும் இந்தத் தொகைகள், எந்தெந்த வகைகளில் செலவிடப்படுகின்றன என்பதை ரகசியமாக வைத்திருக்கின்றனர் கல்வி அதிகாரிகள்" என விவரித்த அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர், "அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு ஆய்வக உபகரணங்கள் மற்றும் புத்தகம் வாங்குவதற்காக 20 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கின்றனர். இதில், 25 ஆயிரம் ரூபாயை ஆய்வகக் கருவிகளுக்கும் 7 ஆயிரத்து 500 ரூபாயை நூலக புத்தகங்களுக்கும் ஒதுக்கியுள்ளனர். இந்த ஆண்டு 6,500 பள்ளிகளுக்கு இந்தத் தொகை வழங்கப்பட இருக்கிறது. இந்தப் பணிகளை மொத்தமாகக் குத்தகை எடுத்துள்ளனர் அமைச்சரைச் சுற்றியுள்ள சிலர். ஒவ்வோர் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு அணியினர்தான், பள்ளிக் கல்வித்துறையின் பெரும்பாலான பணிகளை எடுத்துச் செய்வது வழக்கம்.

இந்தமுறை, சேலம் அணியின் மேற்பார்வையில் ஆய்வக உபகரணங்களை சப்ளை செய்பவர்களை ஒன்று திரட்டியுள்ளனர். இன்னும் இரண்டு மாதத்தில் இந்தப் பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால், 30 % கமிஷன் தொகையை நிர்ணயித்து பேரம் பேசத் தொடங்கியுள்ளனர். ' 30 % கொடுத்தால் உபகரணங்களை சப்ளை செய்யும் ஆர்டர் கொடுப்போம்' என அவர்கள் பகிரங்கமாகப் பேரம் பேசுகின்றனர். இதற்கு சரிப்பட்டு வராதவர்களை ஒரேயடியாக ஒழித்துவிடும் வேலைகளையும் செய்யத் தொடங்கியுள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆர்.எம்.எஸ். பணிகளுக்காக மத்திய அரசு ஒதுக்கிய தொகைகளை எந்தக் கம்பெனிகளுக்கு, எந்த அடிப்படையில்  கொடுத்தார்கள் என்ற விவரத்தையும் அதிகாரிகள் வெளியிடுவதில்லை. வாய்மொழி உத்தரவின் மூலமாகவே பல நூறு கோடிகள் புழங்குகின்றன. இதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்புவது இல்லை. ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் தரம் குறித்து ஆசிரியர்கள் கேள்வி எழுப்பினால், அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. 20 கோடி ரூபாய் அளவுக்குப் பணிகள் நடக்க இருப்பதால், முறையான அறிவிப்பை வெளியிட்டு பணிகளைத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், கல்வித்துறை மேலும் மேலும் சீரழிவதை யாராலும் தடுக்க முடியாது" என்றார் வேதனையோடு.

செங்கோட்டையன்"அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தைப் பொறுத்தவரையில், திட்ட இயக்குநரே அனைத்துக்கும் பொறுப்பாவார். அமைச்சர் தரப்பின் அழுத்தத்தால், வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர் கல்வி அதிகாரிகள். அமைச்சரைச் சுற்றியுள்ள நபர்களே கல்வித்துறையில் அனைத்து முறைகேடுகளையும் அரங்கேற்றுகிறார்கள். இந்தத் தரகர்களைப் பற்றி அமைச்சர் செங்கோட்டையன் தரப்புக்குச் சிலர் எடுத்துச் சென்றபோது, 'அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சென்று சேர வேண்டிய திட்டங்களில் முறைகேட்டுக்கு இடமளிக்காத வகையில் செயல்பட்டு வருகிறோம். எந்தப் புகாராக இருந்தாலும் நேரடியாகக் கொண்டு வாருங்கள். நடவடிக்கை எடுக்கிறேன்' என உறுதியளிக்கிறார். ஆனால், அமைச்சரின் வாய்மொழி உத்தரவை நம்பி புகார் அளித்தால் என்ன நடக்கும் என்பதையும் ஆசிரியர்கள் உணர்ந்து வைத்துள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளாக அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகளை ஆராய்ந்தால், கல்வி அதிகாரிகள் பலரும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை எதிர்கொள்ள நேரிடும். கல்வித்துறையைச் சீரழிக்கும் சேலம் சிண்டிகேட்டை, அரசு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்" என்கிறார் கல்வித்துறை அதிகாரி ஒருவர்.


இதுகுறித்து ஆர்.எம்.எஸ். உயர் அதிகாரியிடம் பேசியபோது, "அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டப் பணிகள் அனைத்தும் வெளிப்படையாக நடக்கின்றன. ஆய்வக உபகரணம் மற்றும் நூலகத்துக்கான புத்தகங்களை வாங்குவதற்கான தொகையைப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே ஒப்படைத்துவிடுகிறோம். உபகரணம் சப்ளை ஆகும்போது தலைமை ஆசிரியர்தான் அதற்கான காசோலையை வழங்குகிறார். தரமற்ற உபகரணம் என்றால், தொகையை நிறுத்தி வைக்கவும் தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் உண்டு. எனவே, குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை" என்றார்.

vikatan.com