நிகழாண்டில் 1 லட்சம் பேருக்கு கல்விக் கடன்: செப்டம்பரில் புதிய திட்டம் தொடக்கம்

தமிழகத்தில் நிகழாண்டில் ஒரு லட்சம் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டம் செப்டம்பரில் தொடங்கப்படும் என்று தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக
கடன்களைப் பெற்று மாணவ, மாணவிகள் தங்களது உயர்கல்வியைத் தொடர ஏதுவாக கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் பள்ளிக் கல்வியில் பல்வேறு புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் ரேங்க் முறை ரத்து, பல ஆண்டுகளாக இருந்து வந்த பாடத் திட்டங்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை என பல்வேறு முக்கிய மாற்றங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை தயாராகி வருகிறது. இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்போது மாணவ, மாணவிகளின் கல்வித் தரத்திலும் சிறப்பான மாற்றங்கள் ஏற்படும் என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கல்விக் கடன் முகாம்கள்: பிளஸ் 2 வகுப்பை முடிக்கும் மாணவ-மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக அவர்கள் கல்விக் கடன் பெற வங்கிகளுக்கு ஏறி, இறங்கும் நிலை உள்ளது. இந்நிலையைப் போக்கும் வகையில் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, பிளஸ் 2 வகுப்பு பயின்ற மாணவர்கள் அவர்களது மேற்படிப்பைத் தொடரும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றியம் தோறும் கல்விக் கடன் முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான பணிகள் பள்ளிக் கல்வித் துறையில் தொடங்கப்பட்டுள்ளன.

செப்டம்பரில் தொடக்கம்: கல்விக் கடன்களுக்கான முகாம்கள் செப்டம்பரில் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் இம்முகாம்கள் நடத்தி முடிக்கும் போது, சுமார் ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில்வதற்குத் தேவையான கல்விக் கடன்கள் பெற்றுத் தரப்படும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மாநில அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். அவர், அரசுக்கும், வங்கிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார். இக்கல்வியாண்டில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும், அடுத்தடுத்த ஆண்டுகளில் அதே அளவுக்கும் கல்விக் கடன்கள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன