செல்லாத ரூபாய் நோட்டு நாளை கடைசி நாள்

செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்வதற்கு, நாளை கடைசி நாள். நவம்பர், 8ம் தேதி இரவு, தொலைக்காட்சியில் பேசிய
பிரதமர் மோடி, '500 - 1,000 ரூபாய் நோட்டுகள், நள்ளிரவு முதல் செல்லாது' என அறிவித்தார். எனினும், அந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்து, அதற்கு பதிலாக, செல்லத்தக்க நோட்டுகளை பெற, அவகாசம் அளிக்கப்பட்டது.உரிய அடையாள சான்று காட்டி, எந்த வங்கியிலும், நாளொன்றுக்கு, 4,000 ரூபாய்க்கு மிகாமல் பெறலாம் என, நிபந்தனை விதிக்கப்பட்டது. பின், பல்வேறு நபர்கள், பினாமிகளை பயன்படுத்தி, செல்லாத நோட்டுகளை, வங்கிகளில் முறைகேடாக மாற்றுவதை அறிந்து, கை விரலில் மை வைக்கும் நடைமுறை வந்தது. சில நாட்கள் கழித்து, 4,000 ரூபாய் உச்சவரம்பை தளர்த்திய, மத்திய அரசு, அவரவர் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் தான், செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வேண்டும் என, புதிய நிபந்தனையை விதித்தது.


அதைத் தொடர்ந்து, 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக, செல்லாத ரூபாய் நோட்டுகள், டிபாசிட் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கிகளில், செல்லாத ரூபாய் நோட்டுகளை, டிபாசிட் செய்வதற்கான காலக்கெடு, நாளையுடன் நிறைவடைகிறது. அதனால், வங்கிகளில், நாளை கூட்டம் அதிகரிக்கும் என்பதால், வங்கி அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்பு கோரியுள்ளனர்.