பள்ளியில் குழந்தையை சேர்க்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது?

உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்தால் அவர்கள் தேர்தலில்
போட்டியிடுவதற்குத் தடை விதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் (என்சிபிசிஆர்) கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அந்த ஆணையத்தின் உறுப்பினரான பிரியாங்க் கனூங்கோ, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான விதிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவருமாறு அனைத்து மாநில அரசுகளையும் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். அதாவது, தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு நபரும் தங்கள் குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க பள்ளியில் இருந்து சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும்படி கோரியுள்ளோம்.
எந்தவொருவர் அவ்வாறு செய்யத் தவறுகிறாரோ அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். எங்களது இந்தப் பரிந்துரையானது அரசியல்சாசனத்தின் 86-ஆவது திருத்தத்தில் இருந்து பெறப்பட்டதாகும். அந்தத் திருத்தம்தான் கல்வியை அடிப்
படை உரிமையாக மாற்றியது.
கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த யோசனை ஒரு மைல்கல்லாகும்.
இந்த யோசனை உள்பட பல்வேறு அம்சங்கள் அடங்கிய பரிந்துரைகளை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் தயாரித்துள்ளது. அவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் ஜாதி அல்லது வறுமை போன்ற காரணங்களால் கல்வி மறுக்கப்பட்டவர்களைக் குறித்து நாம் பேசவில்லை. மாறாக, இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உரிமையாகக் கொண்டுள்ள இன்றைய குழந்தைகளைப் பற்றியே பேசுகிறோம். எங்களின் யோசனையை யாரும் எதிர்த்தால், அவர்கள் அரசியல்சாசனத்தை எதிர்ப்பதாகவே அர்த்தம் என்றார்
பிரியாங்க்.
அண்மைக் காலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியை கட்டாயமாக்கும் சட்டங்களை ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ளன.

எனினும், அனைவருக்கும் வாக்குரிமை என்ற கொள்கைக்கு இது எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்தனர்.