ஆதார் தொடர்பாக தமிழகம் முழுவதும் 301 இடங்களில் சிறப்பு முகாம்

இன்று முதல் 2 மாதங்கள் வரை நடக்கிறது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஆதார் அட்டைக்கு பதிவு செய்து ஆதார் எண் அல்லது
ஆதார் அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் தங்களது ஆதார் எண்ணை தெரிந்து கொள்ள ஏதுவாக, தற்போது ஆதார் உதவி மையங்களை தமிழகத்தின் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள் (285), சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள் (15) மற்றும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் என மொத்தம் 301 இடங்களில் அமைத்துள்ளது. இம்மையங்கள் இன்று முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை வரை செயல்படும்.

இந்த ஆதார் உதவி மையங்களில், ஆதார் எண்ணிற்கு ஏற்கனவே பதிவுகளை செய்துவிட்டு ஆதார் எண், ஆதார் அட்டை கிடைக்கப்பெறாத பொதுமக்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கை விரல் ரேகை மற்றும் கருவிழிகளைப் பதிவு செய்து, சில விநாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம். மேற்கூறிய வழிமுறையில் கிடைத்த ஆதார் எண்ணை ஆதார் உதவி மையங்களின் அருகாமையிலேயே இயங்கும் அரசு -சேவை மையங்களில் காண்பித்து, விரல்ரேகை, கருவிழியினைப் பதிவு செய்து ரூ.30 மட்டும் கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டையாகவோ அல்லது ரூ.10 மட்டும் செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக் கொள்ளலாம்.