கம்ப்யூட்டர் இருக்கு...ஆனா பாடப்புத்தகம் இல்லை...அரசுப்பள்ளி அவலம்

தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் சூழலில் கம்ப்யூட்டரின் தேவை விரிந்துகொண்டே போகிறது. தனியார் பள்ளிகள் இந்த வேகத்துக்கு ஈடு கொடுத்து, மாணவர்களுக்கு நவீன கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டன. ஆனால்,
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்றுவரை கம்ப்யூட்டர் அறிவு எட்டாக்கனியாக இருப்பதுதான் வேதனை. தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியில் கணினியை ஒரு பாடமாகக் கற்பிக்க புத்தகங்களெல்லாம் அச்சிடப்பட்டன. ஆனால், அந்தப் புத்தகங்கள் சரிவர வழங்கப்படாமல் அரசு கைவிட்டுவிட்டது என்றும், கணினி அறிவியலைப் பள்ளிகளுக்குக் கொண்டு செல்ல அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை என்றும் இப்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 ‘‘தனியார் பள்ளிகளுக்கு நிகரா அரசின் கல்வித்திட்டம் இருக்கணும்னுதான் சமச்சீர் பாடத்திட்டத்தில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்தினாங்க. ஆறாம் வகுப்புலயே கம்ப்யூட்டர் பாடம் வந்ததை பெற்றோர்களும், ஆசிரியர்களும் வரவேற்றாங்க. ஆனா, திடீர்னு எந்தக் காரணமுமில்லாம பள்ளிகளுக்கு புத்தகம் கொடுக்கிறதை நிறுத்திட்டாங்க. இப்போ, கணினி அறிவியல் பாடத்தையே கைவிட்டுவிட்டாங்க...’’ என வருத்தம் பொங்க ஆரம்பிக்கிறார் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வெ.குமரேசன்.  ‘‘முன்னாடி +1, +2 வகுப்புகள்லதான் கணினி பாடம் இருக்கும். அதைப் படிச்சிட்டு அதே துறையில பட்டப்படிப்பு படிப்பாங்க.

சமச்சீர் கல்வி அறிமுகமானப்போ கம்ப்யூட்டரோட தேவையை உணர்ந்து ஆறாம் வகுப்புக்கு கொண்டு வந்தாங்க. அந்தப் பாடத்துக்காக அரசுப் பள்ளிகளுக்குக் கம்ப்யூட்டரும் கொடுத்தாங்க. இப்போ பாடப் புத்தகங்களே இல்லாததால கம்ப்யூட்டர்கள் சும்மா கிடக்கு. தனியார் பள்ளிகள் கணினி அறிவியலை முதல் வகுப்பிலிருந்தே கொண்டு வந்திட்டாங்க. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலயும் முதல் வகுப்பிலேயே கணினி அறிவியல் இருக்கு. அங்க, ஒண்ணாம் வகுப்பு மாணவனுக்கு மவுஸ் எப்படி பிடிக்கணும், கீ போர்டு எப்படி பயன்படுத்தணும்னு சொல்லித் தர்றாங்க. ஆறாம் வகுப்பு வரும்போது இன்னும் ஒருபடி மேலே போய் word, Excelனு அடிப்படை கோர்ஸ்களை கத்துக்கொடுக்கிறாங்க.

9ம் வகுப்பு மாணவன், HTML படிச்சு வெப் டிசைனில் கலக்குறான். ஆனா, இதை அரசுப் பள்ளி மாணவர்கள்கிட்ட பார்க்கவே முடியாது. காரணம், கம்ப்யூட்டர் படிப்பே இங்கே இல்லை. நான் ஒரு கல்லூரியில் சில வருடங்கள் வேலை செஞ்சேன். அங்கே அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் கம்ப்யூட்டரை எப்படி ஆன் செய்வதுனு கூட தெரியாம விழிக்கிறதை பார்த்திருக்கேன். இப்படியே போனா அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் வீணாகிடும்’’ என்கிறார் குமரேசன்., இது ஒருபுறம் இருக்க, 2006க்குப் பிறகு கணினி ஆசிரியர்கள் எந்த அரசுப் பள்ளியிலும் நிரப்பப்படவில்லை. உயர்நிலையிலிருந்து மேல்நிலையாக்கப்பட்ட பல பள்ளிகளில் கணினி அறிவியல் பாடமும் ஆரம்பிக்கப்படவில்லை. பாடத்திட்டமும் புதுப்பிக்கப்படவில்லை.

‘‘எங்க அமைப்பு சார்பாக அரசுக்கிட்ட தொடர்ச்சியா கோரிக்கை வச்சிட்டு வர்றோம். இதுல, ஏழை, எளிய மாணவர்களுக்கும் கணினி கல்வி அவசியம்னு வலியுறுத்துறோம். முதல் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தைக் கட்டாயமா கொண்டு வரணும்னு சொல்லியிருக்கோம். தமிழகத்துல பி.எட் கணினி பட்டதாரிகள் மட்டும் 39 ஆயிரம் பேர் இருக்காங்க. அரசுப் பள்ளிகள்ல கணினி அறிவியல் கொண்டு வந்து, ஆசிரியர்கள் நியமிச்சா இருபத்தைந்து ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். இப்போ, டிஜிட்டல் இந்தியா பத்தி பேசிக்கிட்டிருக்கோம். நமக்கு அண்டை மாநிலமான கேரளா 2012ல்தான் பள்ளிகள்ல கணினி அறிவியல் பாடத்தை அறிமுகப்படுத்துச்சு.

ஆனா, இன்னைக்கு நம்மைவிட அசுர வேகத்துல போயிட்டு இருக்காங்க. இனியும் தாமதிக்காம அரசு நடவடிக்கை எடுக்கணும்’’ என்கிறார் குமரேசன். இதே கருத்தை முன்வைக்கிறார் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அண்ணாமலை. ‘‘கணினி அவசியம்னு பேசற அதே அரசுதான்  போதுமான ஆசிரியர்கள நியமிக்காம காலம் தாழ்த்திக்கிட்டு இருக்கு. மேல்நிலைகள்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்பு இருந்தும் ஆசிரியர்கள் இல்ல. இன்னைக்கு கம்ப்யூட்டர் படிச்சிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்கள்ல மட்டும் ஒரு லட்சம் பேருக்கு மேல பதிவு செஞ்சிருக்காங்க. எல்லா பணியிடங்களையும் நிரப்பி பத்தாயிரம் பேருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். நாங்களும் பலமுறை கோரிக்கை வச்சிட்டோம். நடவடிக்கைதான் இல்லை’’ என்கிறார் அவர்.

- பேராச்சி கண்ணன்