இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க புதிய நிபந்தனை: ஆசிரியர்கள் அதிருப்தி

இடமாறுதல் கலந்தாய்வில் அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனையால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும் மே மாதம்ஒளிவுமறைவின்றி இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி பள்ளிகள் திறக்கும்போது, காலிப் பணியிடங்களை நிரப்புவது
வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இது நடைமுறையில் இல்லை.

கடந்த 2015 இல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. எனவே, பள்ளிகள் திறக்கும் முன்பாக கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் பல்வேறு நிலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நிகழாண்டு கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆக. 6 இல் தொடங்கி 21 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
இக்கலந்தாய்வு அரசாணையில் கல்வித்துறை, வழக்கத்துக்கு மாறாக விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி மாறுதல் கலந்தாய்வில் தற்போது பணிபுரியம் பள்ளியில் 1.6.2015-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் பங்கேற்ற முடியாது. இந்த புதிய நிபந்தனை குறித்து ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அமைப்பின் மாநிலச் செயலர்கள் சோ. முருகேசன், மு. மணிமேகலை, மாவட்டச் செயலர் செ. பால்ராஜ், தலைவர் பி. ராஜ்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த
2015 இல் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு ஆக. 16 இல் தொடங்கி 30 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் பணிமாறுதல், பதவி உயர்வு பெற்றவர்கள் செப்டம்பர் மாதத்தில் தான் பணியில் சேர்ந்தனர்.
தற்போது கலந்தாய்வு அரசாணையில் அரசு தெரிவித்துள்ள புதிய நிபந்தனையால் 2 ஆண்டுகள் பணி இருக்கும் ஆசிரியர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் பெரும்பாலான ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிபந்தனை ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே அரசு நிபந்தனையை தளர்த்தி கடந்தாண்டில் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களும் நிகழாண்டு கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கும் வகையில் அரசாணையை திருத்தி வெளியிட வேண்டும்.
மேலும் உபரி நிரவல் ஆசிரியர் பணியிடங்களை பணி நிரப்பும்போது, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான இடங்களில் பணியிடத்துடன் நிரப்ப வேண்டும்.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவித்துள்ளவாறு 6,7 மற்றும் வகுப்புகளில் குறைந்தபட்சம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

கலந்தாய்வுக்கு முன்பு மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் நலனை கருத்தில் கொண்டு மாறுதல் வழங்க வேண்டிய ஆசிரியர்களுக்கு மாறுதல் ஆணை வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.