வலைதளங்களில் வழிகாட்டும் ஆசிரியர்!


 

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கி, மாணவ, மாணவியர் நேரத்தை வீணடிக்கும் நிலையில், அவற்றை கல்வி புகட்டும் கருவிகளாக, ஆசிரியர் ஒருவர் பயன்படுத்தி வருகிறார். சென்னை புரசைவாக்கம், எம்.சி.டி.எம்., என்கிற முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சவுந்தர பாண்டியன்
. 16 ஆண்டுகளாக பணிபுரிகிறார்.


பிளஸ் 2 பாடங்களின் முக்கிய அம்சங்களை தொகுத்து, மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற உதவி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, மாணவர்களின் பெற்றோருக்கு, மொபைல் போன் வாயிலாக, பாடத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வந்தார். தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 'வாட்ஸ் ஆப்' மூலம், பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்.


தன் மொபைல்போன் எண்ணை, மாணவர்களுக்கு வழங்கும் இவர், மாணவர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்து கொள்கிறார். பின், அந்த குரூப் மாணவர்கள், தங்களது சந்தேகத்தை கேட்டால், வாட்ஸ் ஆப்பில் பதிலளிக்கிறார். மேலும், தாவரவியல் மற்றும் உயிரியலில் உள்ள முக்கிய பாடங்களை, தன்னுடன் பணியாற்றும் உயிரியல் ஆசிரியர் இளங்கோவுடன் இணைந்து, சிறிய தொகுப்பாக தயாரித்துள்ளார். இந்த தொகுப்பை, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் இலவசமாக வழங்கி, மாணவர்கள் மதிப்பெண் பெற வழிகாட்டுகிறார்.


தன் சேவை குறித்து, ஆசிரியர் ஆர்.சவுந்தரபாண்டியன் கூறியதாவது:

பாடங்களில் முக்கிய அம்சங்களை, தனியாக பிரித்து கொடுக்கும்போது, அதை மாணவர்கள் எளிதாக படிப்பர். நான் தயாரித்த தொகுப்புகள், மாணவர்களுக்கு பயன்பட்டதால், அதை இலவசமாகவே வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்கிறேன். பள்ளி வேலை நேரத்தில், என் வகுப்பில் மட்டுமே பாடம் எடுப்பேன். மற்ற நேரங்களில்தான், சமூக வலைதளங்களில் பதிலளிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.