நாடு முழுவதும் பேங்க் ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.. வங்கி பணிகள் பாதிக்கும் அபாயம்

ஸ்டேட் வங்கியுடன் பிற வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், மைசூர், பாட்டியாலா ஹைதராபாத்,
ஜெய்ப்பூர் ஆகிய 5 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

இதனை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைப்பதற்கான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 12, 13-ந் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்து இருந்தது. இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவால் இந்த வேலை நிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பாக டெல்லியில் தொழிலாளர் நல ஆணையர் தலைமையில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், நாடு முழுவதும் இன்று திட்டமிட்டப்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.