18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை

 தமிழகத்தில் புதிதாக 18 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


        மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் 41 கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில்
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் கூடுதலாக தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்துள்ளார்.


அதன்படி, தமிழகத்தில் இரண்டாம் நிலை நகரங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை அமைப்பது தொடர்பாக முன்னதாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ துறை அதிகாரிகள் கூறுகையில், இந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்த கல்வியாண்டில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்படும்; திருநெல்வேலி, வேலூர், புதுக்கோட்டை, ஈரோடு, சிதம்பரம், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருச்சி, தேனி, கோவை, சென்னை, சிவகங்கை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகைப்பட்டினம், நாமக்கல், சேலம், விருதுநகர் ஆகிய 18 நகரங்களில் இந்தப் பள்ளிகள் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த நகரங்களில் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் அமைக்கப்பட்டால் துணை நகரங்களில் உள்ள மாணவர்கள் பயனடைவார்கள் என்றனர்.