தமிழக சட்டப்பேரவை - நாளை இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: கவர்னர் ரோசைய்யா உரையாற்றுகிறார்

ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்தில் நடைபெறும். முதல் கூட்டத்
தொடரின் முதல் நாள் கூட்டத்தில் மாநில கவர்னர் உரையாற்றுவார்.

இந்த ஆண்டுக்கான சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. அப்போது சட்டசபையில் கவர்னர் ரோசய்யா உரையாற்றுகிறார். இதற்கான அறிவிப்பாணையை தமிழக சட்டசபையின் செயலாளர் .மு.பி.ஜமாலுதீன் கடந்த 11-ந் தேதி வெளியிட்டார்அதில், “தமிழ்நாடு சட்டசபையின் கூட்டத்தை வரும் 20-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் கவர்னர் கூட்டியிருக்கிறார். அன்று காலை 10.30 மணிக்கு அவர் உரை நிகழ்த்த இருக்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது. எனவே சட்டசபையை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. நுழைவு வாயிலுள்ள சாய்தளம் புதிதாக்கப்பட்டுள்ளது.

உரை நிகழ்த்துவதற்காக கவர்னர் ரோசய்யா நாளை காலையில் சட்டசபைக்கு வருவார், அவரை சபாநாயகர் .தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சட்டசபைக்குள் அழைத்து வருவார்கள். அவர் வருவதற்கு வசதியாக அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வரிசையில் உள்ள நீண்ட மேஜைகள் அகற்றப்பட்டு அங்கு தரை விரிப்பு விரிக்கப்பட்டு இருக்கும். சபாநாயகர் இருக்கையில் கவர்னர் ரோசய்யாவை அமர வைப்பார்கள். அதைத்தொடர்ந்து கவர்னர் உரை நிகழ்த்தத் தொடங்குவார். அவர் ஆங்கிலத்தில் நிகழ்த்தும் உரை நிறைவடைந்ததும், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் .தனபால் நிகழ்த்துவார். அதோடு நாளை நடக்கும் சட்டசபை நிகழ்ச்சி நிறைவு பெறும்.

இந்தக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதுபற்றி சபாநாயகர் .தனபால் தலைமையில் நாளை நடக்கும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

அதன் பின்னர் கூடும் சட்டசபை நிகழ்ச்சிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது எம்.எல்..க்கள் விவாதம் நடைபெறும். இந்த விவாதம் சுமார் 4 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.


அந்த தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு இறுதியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதிலளித்து உரையாற்றுவார்.