ரூ.1 லட்சம் கோடி குஷி Dinakaran தலையங்கம்

சமீபத்தில் தான் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கழிந்தது; மத்திய அரசு ஊழியர்களை பொறுத்தவரை நேற்றுமுன்தினம் இன்னொரு தீபாவளி என்று தான் கூற வேண்டும். ஆம், இதுவரை இல்லாத அளவுக்கு
சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பளமே 18,000 ரூபாய் என்றாகி விட்டது; அதிகபட்ச சம்பளம் 2.25 லட்சம் ரூபாய். 47 லட்சம் ஊழியர்கள், 52 லட்சம் ஓய்வூதியதாரர்கள் நிச்சயம், மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றிருப்பர்.
வாக்கு வங்கியை பொறுத்தவரை, அரசு ஊழியர்களை யாரும் ஒதுக்கி தள்ளி விட முடியாது; கணிசமான வாக்காளர்களை கொண்ட மகத்தான பிரிவு இது. அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் ஊழியர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும். தனி இன்சூரன்ஸ் திட்டம், பணிக்கொடை வரம்பு இரு மடங்காக அதாவது ரூ.10 லட்சம் வரை அளிப்பது, ஊழியர்கள், மத்திய பாதுகாப்பு படையினருக்கு ஒரே பணி ஒரே பென்ஷன் திட்டம் என்பன போன்றவை எல்லாம் கூடுதல் சலுகைகள்.
இதில் குறிப்பிடத்தக்க ஒரே முக்கிய விஷயம், திறன் சார்ந்த பணியின் அடிப்படையை பிரதான தகுதியாக வைத்து சலுகைகள் நிர்ணயிப்பது என்பது தான். முந்தைய சம்பள கமிஷனும் சரி, மத்திய நிதி ஆணையமும் சரி இந்த விஷயத்தை சுட்டிக்காட்டியது. ஆனால், ஏனோ அப்போது இதற்கு அரசு தனி கவனம் செலுத்தவில்லை. இப்போது ஏழாவது சம்பள கமிஷனுக்கு தலைமை வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி மாத்தூர், இது தொடர்பாக குறிப்பாக பரிந்துரை செய்துள்ளார். திறன் சார்ந்த பணிக்கு முக்கியத்துவம் தருவது தொடர்பாக அந்தந்த துறைகள் ரீதியாக தனி முறை வடிவமைக்க வேண்டும். அந்தந்த துறை வளர்ச்சிக்கு ஊழியர்கள் பங்கு எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதை பொறுத்து ஒவ்வொரு ஊழியருக்கும் பணித்திறன் அடிப்படையை முடிவு செய்ய வேண்டும்.

சாப்ட்வேர் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெரும்பாலும், பணித்திறன் முக்கியமாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் ஊதியம், போனஸ், சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நடைமுறையை கண்டிப்பாக மத்திய அரசு ஊழியர்களிடம் அமல்படுத்த வேண்டும் என்று கமிஷன் திடமாக பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசு, தன் ஊழியர்களிடம் இந்த பணித்திறன் முறையை அமல்படுத்தினால் துறை சார்ந்த இலக்கை எட்டிவிட முடியும் என்று கமிஷன் கூறியுள்ளது. இதை அமல்படுத்தினால், மத்திய அரசு துறை ஊழியர்களின் பணித்திறன் அதிகரிக்கும்; மக்களுக்கும் பெரிதும் பலன் கிடைக்கும் என்று நம்பலாம்.