"மாணவர்கள் நாளிதழ்களை படிப்பது அவசியம்'

மாணவர்கள் தங்களது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள தினமும் நாளிதழ்களை தவறாமல் படிக்க வேண்டும் என நூலகத்
துறையினர் வலியுறுத்தினர்.

           பொது நூலக இயக்ககம், சென்னை எருக்கஞ்சேரி முழுநேர கிளை நூலகம் சார்பில் நூலகம், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் பெரம்பூர் செயின்ட் மேரீஸ் ஆண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது. இந்த முகாமை பள்ளியின் முதல்வர் என்.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து நூலக ஆய்வாளர் சி.எஸ்.ராஜ்குமார் பேசியது: மாணவர்கள் பாடநூல்களுடன் அறிவுத் திறனை வளர்க்கும் சிறுகதைகள், பொது அறிவு சார்ந்த நூல்கள், தலைவர்களின் வரலாறு ஆகிய நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும். அன்றாடம் நடைபெறும் முக்கியச் செய்திகளைச் தெரிந்து கொள்ள செய்தித் தாள்கள் படிப்பதை மாணவர்கள் வழக்கமாகக் கொள்ள வேண்டும்.

சாலையில் தினமும் பயணிக்கும்போது போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும் என்றார் அவர்.

இந்த முகாம் வெள்ளிக்கிழமை (நவ.28) வரை நடைபெறுகிறது.


நிகழ்ச்சியில் எருக்கஞ்சேரி கிளை நூலகர் சி.ஆ.மோகனரங்கம், செம்பியம் காவல் நிலைய எஸ்.ஐ.க்கள் என்.ரங்கநாதன், ஆர்.உமாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.