நாடார் சமுதாயம் பற்றிய அவதூறு தகவல்: சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கக்கோரி வழக்கு தேசிய கல்வி கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சி.பி.எஸ்.இ. பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் பற்றிய அவதூறு தகவலை நீக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவுக்கு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய கல்வி
கவுன்சிலுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை, விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கலைக்கோட்டு உதயன்(வயது 45). இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

பாரம்பரியமிக்க சமுதாயம்
நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நாடார் சமுதாயத்தை சேர்ந்தவன். நாடார் சமுதாயம், பாரம்பரியமிக்க, சுயமரியாதை கொண்ட சமுதாயமாகும். இந்த சமுதாயம் கடின உழைப்பாலும், கல்வியாலும் முன்னேறியதாகும்.

இந்த நிலையில், மத்திய கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) கீழ் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவர்களின் சமூக அறிவியல் புத்தகத்தை தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கல்வி கவுன்சில் தயாரித்துள்ளது.
இந்த புத்தகத்தில், நாடார் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் வேண்டுமென்றே சேர்க்கப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க வேண்டும்
அதாவது, தென்திருவாங்கூர் பகுதியில் இருந்து, மிராசுதாரான நாயர்களிடம் வேலை செய்ய நாடார் சமுதாயம் குடிபெயர்ந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடார் சமுதாயத்தை பண்ணை அடிமைகள் என்று அவதூறாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தீண்டத்தகாத சமுதாயமாகவும் குறிப்பிட்டுள்ளனர். இவை அனைத்தும் முற்றிலும் தவறான தகவலாகும்.

எனவே இப்படி தவறான தகவலை பள்ளி பாடப்புத்தகத்தில் இடம் பெற செய்ததற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த அவதூறு பாடத்தை புத்தகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தேசிய கல்வி (ஆராய்ச்சி மற்றும் பயிற்சி) கவுன்சிலின் தலைவர், சி.பி.எஸ்.இ. தலைவர், உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உத்தரவிடவேண்டும்
எனவே நாடார் சமுதாயத்தை பற்றிய அவதூறு, பொய்யான தகவல்களை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கவும், இதுசம்பந்தமாக நான் அளித்த மனுவை பரிசீலிக்கவும் தேசிய கல்வி (ஆராய்ச்சி மற்றும் பயிற்சி) கவுன்சில் தலைவர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அக்ரவால், நீதிபதி கே.ரவிசந்திரபாபு ஆகியோர் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் ஆர்.சங்கரசுப்பு, ஏ.ரமேஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

இதையடுத்து, இந்த மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி தேசிய கல்வி கவுன்சில் தலைவர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.