பள்ளிக்கு "டிமிக்கி' கொடுக்கும் ஹெச்.எம்.,கள் மாணவர்கள் கல்வித்தரம் பாதிப்பு: கல்வியாளர்கள் கடும் அதிருப்தி

"பல்வேறு காரணங்களுக்காக வெளியே செல்லும் ஹெச்.எம்.,கள், பள்ளிக்கு, "டிமிக்கி' கொடுப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வித்துறை அதிகாரிகள்
சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள, 385 யூனியன்களில், 34 ஆயிரத்து, 871 துவக்கப்பள்ளி, 9,969 நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகிறது. அவற்றில், இரண்டு லட்சத்து, 12 ஆயிரத்து, 105 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதில், 53 லட்சத்து, 32 ஆயிரத்து, 613 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழக அரசு, 14 வகையான நலத்திட்ட உதவிகள் வழங்குகிறது. அதன்படி, விலையில்லா புத்தகம், நான்கு செட் சீருடை, காலணிகள், புத்தகப் பை, கணித உபகரணப்பெட்டி, புவியியல் வரைபடம், நோட்டுகள் உள்ளிட்டவை அடங்கும். அவை, ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. விலையில்லா நலத்திட்ட உதவிகள் அனைத்தும், அந்தந்த மாவட்ட ஒன்றியங்களில் உள்ள ஏ.இ.இ.ஓ., அலுவலகம் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவற்றை, அந்தந்தப்பள்ளி துவக்க, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளிக்கு வந்து அனுமதி நோட்டில் எழுதிவிட்டுச் சென்று பெற்றுவர வேண்டும். விலையில்லா நலத்திட்டம் மற்றும் தொடக்கக் கல்வித்துறை சார்பான தகவல்கள், கல்வித்தர முன்னேற்றம் குறித்த கூட்டங்களுக்கும், தலைமையாசிரியர்கள் சென்று வருகின்றனர்.

மேலும், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்படும் பள்ளி பராமரிப்பு மற்றும் மானியத் தொகையை பெறுவதற்கு வங்கிக்கும் செல்வது, பள்ளிக்கு தேவையான கட்டிட வசதி, கழிப்பிடம், சுற்றுச்சுவர் போன்ற வசதிகளை பெறுவதற்கும், மாநில இயக்குனரகம், மாவட்ட திட்ட அலுவலகம் ஆகியவற்றுக்கு, புள்ளி விவரங்கள் தொடர்பான கூட்டம் நடக்கிறது.
பல்வேறு கூட்டங்களுக்கு, தலைமையாசிரியர் செல்லவேண்டி உள்ளதால், அடிக்கடி பள்ளி வேலை நேரத்தில், வெளியே சென்று வருகின்றனர். குறிப்பாக, 75 சதவீதம் தலைமையாசிரியர்கள், காலையில் கூட்டத்துக்கு சென்றால், மதியம் பள்ளிக்கு வருவதில்லை என்றும், மாலையில் கூட்டம் என்றால், காலையில் பள்ளிக்கு வராமல், "டிமிக்கி' கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது: பெரும்பாலான தலைமையாசிரியர்களுக்கு, பெயரளவில் ஒரு வகுப்பு மட்டுமே உள்ளது. அதில், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் பாடம் நடத்துவதில்லை. விலையில்லா நலத்திட்ட உதவிகள் பெற, எஸ்.எஸ்.ஏ., பள்ளி பராமரிப்பு நிதி எடுக்க, கூட்டங்களுக்கு செல்வது என, 75 சதவீதம் பள்ளி தலைமையாசிரியர்கள், ஓ.பி., அடிக்கின்றனர்.

அதனால், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஓ.பி., அடிக்கும் தலைமையாசிரியர்கள் மீது, கல்வித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமையாசிரியரின் வகுப்புகளை, கல்வி அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.