முழுமையாக கிடைக்காத சூழ்நிலை

மாநில தகுதித் தேர்வு (ஸ்லெட்), தேசிய தகுதித் தேர்வு (நெட்)க்கு முந்தைய பணி அனுபவத்திற்கு, மதிப்பெண் கிடையாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவித்துள்ளது. இதன் காரணமாக, 50
சதவீதத்திற்கு மேற்பட்டோருக்கு, அனுபவத்திற்கான மதிப்பெண், முழுமையாக கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கடும் பாதிப்பு:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், 1,093 உதவி பேராசிரியரை நியமனம் செய்வதற்காக, சென்னையில், மூன்று மையங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இதில், 15 ஆயிரம் பேருக்கு, இரு கட்டங்களாக, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான, 34 மதிப்பெண்களில், ஆசிரியர் பணி அனுபவத்திற்கு மட்டும், 15 மதிப்பெண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏழரை ஆண்டு பணி புரிந்திருந்தால், முழுமையான மதிப்பெண் கிடைக்கும். அதன்படி, விண்ணப்பித்துள்ளவர்களில், ஏராளமானோர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்கள், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முதல்வர் பரிந்துரையுடன், கல்லூரி கல்வி இயக்குனரிடம் இருந்து, அனுபவ சான்றிதழை பெற்றுள்ளனர். இந்நிலையில், 'ஸ்லெட்' மற்றும், 'நெட்' தகுதியை பெற்றதற்குப் பின் உள்ள அனுபவம் மட்டுமே, கணக்கில் கொள்ளப்பட்டு, மதிப்பெண் வழங்கப்படும்' என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. 'ஸ்லெட்' மற்றும் 'நெட்' தகுதிக்கு முந்தைய அனுபவம் கணக்கில் வராது. இதனால், 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, கடும் பாதிப்பு ஏற்படும் என, கூறப்படுகிறது. டி.ஆர்.பி.,யின் புதிய நிபந்தனை குறித்த அறிவிப்பு, நேற்று, சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும், விண்ணப்பதாரர்கள், அதிர்ச்சி அடைந்தனர். லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில், விண்ணப்பதாரர்கள், திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து, காமராஜர் பல்கலையின் உறுப்பு கல்லூரி (சாத்தூர்) ஆசிரியர், பெருமாள் கூறியதாவது: கடந்த, 2006, 09ல், உதவி பேராசிரியர் தேர்வு நடந்தது. அதில், 'நெட்- ஸ்லெட்' தகுதிக்கு முந்தைய பணி அனுபவமும், கணக்கில் கொள்ளப்பட்டு, மதிப்பெண வழங்கப்பட்டது. ஆனால், இப்போது, 'நெட் - ஸ்லெட்' தகுதிக்கு பிந்தைய அனுபவம் மட்டுமே, கணக்கில் கொள்ளப்படும் என, கூறுகின்றனர்.

பதிலளிக்க வேண்டும்:


நான்கு முறை, அறிவிப்பை (நோட்டிபிகேஷன்) வெளியிட்டு, டி.ஆர்.பி., குழப்புகிறது. டி.ஆர்.பி.,யின் இந்த அறிவிப்பால், மொத்த விண்ணப்பதாரர்களில், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு, பாதிப்பு ஏற்படும். 'நெட் - ஸ்லெட்' தகுதியை பெற்றபின் தான், ஆசிரியர் பணியாற்ற தகுதி எனில், இத்தனை ஆண்டுகளாக, கல்லூரிகளில் பணியாற்ற, அனுமதித்தது ஏன்? கடந்த காலங்களில், ஒட்டுமொத்த அனுபவத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட டி.ஆர்.பி., இப்போது மறுப்பது ஏன்? இதற்கெல்லாம், டி.ஆர்.பி., பதிலளிக்க வேண்டும். இவ்வாறு, பெருமாள் கூறினார். புகார் குறித்து, டி.ஆர்.பி., உறுப்பினர் - செயலர், வசுந்தரா தேவியிடம் விளக்கம் பெற முயன்றும், அவர், 'பிசி'யாக இருப்பதாகவும், இப்போது, 'பேச முடியாது' என்றும், ஊழியர்கள் தெரிவித்தனர்.