முதுநிலை ஆசிரியர் தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு இன்று துவக்கம்

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு இன்றும் நாளையும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 881 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை 22ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தமிழ்பாடத் தேர்வு வினாத்தாளில் 40க்கும் அதிகமான பிழைகள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழைத் தவிர பிற பாடங்களுக்கு மதிப்பெண் பட்டியல் டி.ஆர்.பி இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து 2 ஆயிரத்து 770 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களுக்கு கடந்த மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் ஒரே இன சுழற்சியில் சமமான மதிப்பெண் பெற்ற மேலும் 213 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவதாக கடந்த 24ம் தேதி டி.ஆர்.பி அறிவித்து இருந்தது. இதன் அடிப்படையில் இன்றும் நாளையும் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் தற்போது அழைப்பு கடிதம் பெற்றவர்களும், ஏற்கனவே பங்கேற்க தவறியவர்களும் பங்கேற்கலாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரித்துள்ளது.