பள்ளி ஆய்விற்கு வந்து "எஸ்கேப்' ஆன ஆசிரியர்கள்

மதுரையில் பள்ளிகளில் ஆய்வு செய்ததாக கூறி, கையெழுத்து
மட்டும் போட்டுவிட்டு, "எஸ்கேப்' ஆன ஆசிரியர் பயிற்றுனர்களை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் (எஸ்.எஸ்.ஏ.,) பூஜா
குல்கர்னி எச்சரித்தார்.

மாவட்டத்தில் இத்திட்ட செயல்பாடுகள் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. பூஜா குல்கர்னி தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர்கள் அமுதவல்லி, பார்வதி (எஸ்.எஸ்.ஏ.,), மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி மைய முதல்வர் பாத்திமா திலகராணி, தொடக்க கல்வி அலுவலர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.ஆய்வில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் வாசிப்பு மற்றும் எழுதும் திறன் 40 சதவிகித்திற்கும் கீழ் இருந்தது கண்டு பல்வேறு கேள்விகளை இயக்குனர் எழுப்பினார். குறிப்பாக, கொட்டாம்பட்டி, உசிலம்பட்டி, மதுரை கிழக்கு, செல்லம்பட்டி, சேடபட்டி, வாடிப்பட்டி ஆகிய "பிளாக்'களில், மாணவர்கள் திறன் மிக குறைவாக இருந்ததை கண்டித்தார்.

மேலும், பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணிகளை உற்றுநோக்கும் ஆசிரியர் பயிற்றுனர்களையும், மேற்பார்வை செய்யும் கண்காணிப்பாளர்களிடமும் இதுகுறித்து விளக்கம் கேட்டார். ஆனால், அவர்கள் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இயக்குனர் எழுப்பிய பல கேள்விகளுக்கும் மாறுபட்ட தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை சிலர் அளித்ததால் "டென்ஷன்' ஆனார்.

பள்ளிகள் ஆய்விற்கு சென்ற பலர், வருகை பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு, ஆய்வு செய்யாமல் "எஸ்கேப்' ஆனதை கண்டறிந்து எச்சரித்தார். குறைந்தபட்சம் ஒரு பள்ளியில் இரண்டு மணி நேரமாவது ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வலியுறுத்தினார்.
பள்ளி செல்லா குழந்தைகள் விவரம் தொடர்பாக சேகரித்த தகவல்களிலும், சில குளறுபடி இருந்தது. "பிளாக்' வாரியாக அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களுக்கும், ஒருங்கிணைப்பாளர் அளித்த புள்ளிவிவரங்களுக்கும் வித்தியாசம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.ஏ., திட்ட செயல்பாடுகளை துரிதபடுத்த வேண்டும் என்று பூஜாகுல்கர்னி அறிவுறுத்தினார்.