வரும் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு கவனம்

2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக
முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி கூறினார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தலைமையில் விருதுநகர் மாவட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கான மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது: மாணவர்கள் அனைவரும் தொடக்க நிலை வகுப்புகளிலே தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதத்திறன்களை முழுமையாக பெற்று உயர் தொடக்க வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். அதற்கான முயற்சிகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கான கற்றல் அடைவுத்திறன் தேர்வுகளை மாதம் ஒரு முறை நடத்தி, பின்தங்கிய மாணவர்கள் மீது அதிக தனிக்கவனம் செலுத்த வேண்டும். தானே கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி மாணவர்களின் அடிப்படை கணிதத்திறன்களை வளர்க்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். அதற்கான வளப்படுத்துதல் பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான ஆதார அறை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

2014-15 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு திட்ட நிதி வரைவில் பள்ளி செல்லா குழந்தைகளை மீள பள்ளியில் சேர்த்தல் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்கு புலம் பெயர்ந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அவரவர் தாய்மொழியிலேயே பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன என்றார் அவர்.


இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட கூடுதல் முதன்மைகல்வி அலுவலர் சுவாமிநாதன், உதவித்திட்ட அலுவலர் மாடசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பாலமுருகன் மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ராமலட்சுமி, மாவட்ட புள்ளியியல் அலுவலர், கணக்காளர் மற்றும் பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.