அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க ஓய்வூதியர்கள் கோரிக்கை

அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும் என ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஓய்வூதிய சங்க மாநில செயற்குழுக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடந்தது. மாநிலத் தலைவர் காதர் மீரான் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கலியபெருமாள் வரவேற்றார். பொதுச்செயலர் மருதை சங்க செயல்பாடு குறித்த அறிக்கையையும், பொருளாளர் காளிங்கராயன் வரவு, செலவு அறிக்கையையும், மாநில பொதுச்செயலர் துரைசாமி திண்டுக்கல் மாநாட்டு வரவு செலவுகளை சமர்பித்தனர்.கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சண்முகம், செயலர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஓய்வூதியர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50,000-மாக உயர்த்தியதற்கும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் 90 சத அகவிலைப்படியில் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும். முழு ஓய்வூதியம் பெற்றிட தகுதியாக உள்ள 30 ஆண்டு பணிக்காலத்தை 20 ஆண்டுகளாக குறைக்கவேண்டும். மருத்துவப் படியாக மாதம் ரூ.300, பொங்கல் பரிசுத் தொகையை ரூ.1,000, பண்டிகை முன்பணத்தை ரூ.5,000 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500 என நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.