குரூப் 4: 222 காலி பணியிடங்களுக்கு டிசம்பர் 6-இல் கலந்தாய்வு

குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 222 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது.அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப்
பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தில் இந்தக் கலந்தாய்வு நடைபெறும் என்று தேர்வாணையச் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை அறிவித்துள்ளார். குரூப் 4 தொகுதியின் கீழ் உள்ள இளநிலை உதவியாளர், நில அளவர், வரைவாளர் பதவிகளுக்குக் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 7 ஆம் தேதியன்று தேர்வு நடத்தப்பட்டது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் இதுவரை காலியாகவுள்ள 222 இடங்களுக்கான ஐந்தாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தற்போது நடத்தப்படவுள்ளது. இந்தக் கலந்தாய்வுக்கு காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் அழைக்கப்படுவர். அதுகுறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கலந்தாய்வுக்கு வரும் போது எடுத்து வர வேண்டும் என்று செயலர் விஜயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.