குரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு... 1055 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 1055 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பணியில் 1,064 பேரை தேர்வு
செய்வதற்கான அறிவிப்பை செப்டம்பர் 5ம் தேதி வெளியிட்டது. இதில் துணை வணிக வரி அதிகாரி66, சார்பதிவாளர் (கிரேடு2) 2, சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி14, தொழிலாளர் உதவி ஆய்வாளர் 9, ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் அதிகாரி 3, உதவி தனி அலுவலர் 16, ஆடிட் இன்ஸ்பெக்டர்39, கைத்தறி ஆய்வாளர் 147, கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர் 302, வருவாய் உதவியாளர் 370, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் 71  உள்ளிட்ட பதவிகள் இடம் பெற்றிருந்தன. விண்ணப்பித்தல் இணையதளம் வாயிலாக அறிவிப்பு வெளியான நாள் முதல் தொடங்கியது.

இத்தேர்வுக்கு சுமார் 7.50 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in, www.tnpscexams.net என்ற டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. தேர்வாளர்கள் ஹால் டிக்கெட்டை டவுன் லோடு செய்து வருகின்றனர்  .மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்த 1,055 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர் விவரம், எதற்காக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்ற விவரம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட வயதை தாண்டியதாக அதில் கூறப்பட்டுள்ளது. குரூப் 2 தேர்வுக்கான எழுத்து தேர்வு டிசம்பர் 1ம் தேதி நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.