பெண் தேர்வாளரை பணியில் நியமிக்க வேண்டும்: ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

தவறான கேள்விக்கு சரியான விடை எழுதிய பெண் தேர்வாளருக்கு வேலை வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சென்னை
உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலம் மாவட்டம், கசகனூர் கிராமத்தைச் சேர்ந்த பி.தேன்மொழி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிவரம்: 2012-2013-ஆம் ஆண்டு முதுநிலை உதவி ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தியது.

தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தது. தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் நான் சரியான பதில் எழுதினேன். இது போன்ற கேள்விக்கு பதில் அளித்தால் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.

ஒரு மதிப்பெண் வழங்கினால் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டுக்கு தேவையான 94 மதிப்பெண் எனக்கு கிடைக்கும். அதனால், கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கு தேவையான ஒரு மதிப்பெண்ணும், வேலையும் எனக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் அன்பரசு ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு வினாத்தாளில் தவறான பதில் கொடுக்கப்பட்டிருந்தும் மனுதாரர் சரியான பதில் எழுதியுள்ளார். கேள்விக்கு பதில் அளித்ததால் அதற்கு ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும்.


இதன் மூலம், மனுதாரருக்கு தேவையான கட்- ஆஃப் மதிப்பெண் கிடைத்துவிடும். அதனால், மனுதாரரை முதுநிலை உதவி ஆசிரியர் பணியில் நியமிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.