ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி "ஜோராக"-தீபாவளி வசூல்: பெற்றோர் அதிருப்தி

கோவை: கோவையில் சில தனியார் பள்ளிகளில் தீபாவளி பண்டிகையை காரணம் காட்டி, ஆசிரியர் அல்லாத பள்ளி ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக கூறி "ஜோராக" நன்கொடை
வசூலிக்கப்பட்டு வருகிறது; பள்ளிகளில் நோட்டீஸ் விநியோகித்து கட்டண வசூல் செய்வது, பெற்றோர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

ஆண்டு முழுவதும் தங்களுக்காக சேவை செய்பவர்களுக்கு, தீபாவளி பண்டிகை நேரத்தில் அன்பளிப்பு வழங்குவதை பலரும் கடமையாக செய்து வருகின்றனர். இந்த அன்பளிப்பு முறையை கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகள், தீபாவளி நன்கொடை என்ற பெயரில் ஜோராக "வசூல் வேட்டை" நடத்தி வருகின்றன. இதற்கென்று பள்ளிகள் தனியாக நோட்டீஸ் அடித்து மாணவர்களிடம் வசூலித்து வருகின்றன.

குறிப்பிட்ட நோட்டீசில், " அன்பு பெற்றோர்களே!...உங்கள் மகன் படிக்கும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், தீபாவளி பண்டிகையை தங்களது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாட, தாராளமாக நன்கொடை தாருங்கள். குறைந்தது 250 ரூபாய் அளிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பள்ளிகளில் இந்த நன்கொடை வசூல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது தான் பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில பள்ளிகளில் மாணவர்களின் நோட்டுகளில் எழுதியும், பள்ளி நோட்டீஸ் போர்டுகளில் ஒட்டியும் வசூல் வேட்டை நடக்கிறது.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், "பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதும், வழங்காததும் குறிப்பிட்ட பள்ளிகளின் பொறுப்பு. ஆனால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பணம் வசூலித்து கொடுப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல.


அதிலும், கட்டாய வசூல் ஏற்றுக்கொள்ள முடியாது. மாணவர்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படகூடாது என்ற நோக்கில், எதிர்கால நலன் கருதி வேறு வழியில்லாமல் தீபாவளி நன்கொடை பள்ளிகளுக்கு தரவேண்டி உள்ளது" என, ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.