பள்ளி, கல்லூரிகளில் சுகாதாரமான உணவுகள்: கலெக்டர் வேண்டுகோள்

விருதுநகர்: "பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள உணவுக் கூடங்களில் மாணவ, மாணவியருக்கு சுகாதாரமான, தரமான உணவு
வழங்கவேண்டுமென" கலெக்டர் ஹரிஹரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி உணவுக்கூடங்களில் சுகாதாரம் மற்றும் தரமான உணவு வழங்க வேண்டும். இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடமிருந்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

இதற்காக, மாவட்ட உணவுப்பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் கவிக்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுவினர், மாவட்டத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில், உணவு விடுதிகளில் ஆய்வு செய்து உணவுக்கூடங்கள் சுத்தமாக, சுகாதாரமாக உள்ளதா? உணவுப்பொருட்கள் தரமாக உள்ளதா? என்பதையும், பொட்டலமிட்ட உணவுப்பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை சோதனையிடவும், பாதுகாப்பாக குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதையும், மேற்படி குடிநீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறையும் சுத்தம் செய்யப்படுகிறா என்பதையும் கண்காணிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், அருப்புக்கோட்டை அருகிலுள்ள கல்லூரியில் பாதுகாப்பில்லாத உணவு வழங்கியதால் அதன் மாணவர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாக புகார்கள் வந்துள்ளன.


இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நிகழாமல் இருக்க அனைத்துப்பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள், முதல்வர்கள், விடுதிக்காப்பாளர்கள், தகுந்த ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.