சுகாதார அமைச்சர் பதவிக்கு " வி சென்டிமென்ட்' : பள்ளிக்கல்வியில் தாக்குபிடிப்பாரா வீரமணி?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பதவிக்கு, "வி' என்ற எழுத்தில் துவங்கும், பெயரைக் கொண்ட, எம்.எல்.ஏ.,க்களே பொறுப்பேற்றுள்ளது,
அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அவரது அமைச்சரவையில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த, டாக்டர் விஜய், சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்; இவர் எம்.பி.பி.எஸ்., பட்டதாரி.எட்டு மாதங்களுக்கு முன், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியைச் சேர்ந்த, எம்.எல்.ஏ., வீரமணி, சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.நேற்று, திடீரென வீரமணி, சுகாதாரத் துறை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனிடம், கூடுதல் பொறுப்பாக இருந்த,
பள்ளிக் கல்வித் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய சுகாதாரத்துறை அமைச்சராக, டாக்டருக்கு படித்த, புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க., ஆட்சிக்குவந்ததில் இருந்து, விஜய், வீரமணி, விஜயபாஸ்கர் ஆகியோர், சுகாதாரத்துறை அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்கள், மூன்று பேர் பெயரின் முதல் எழுத்தும், ஆங்கில எழுத்தான, "வி'யில் தான் துவங்குகிறது.இது புது சென்டிமென்டாக உருவாகி உள்ளதால், அ.தி.மு.க.,வில், "வி' என்ற எழுத்தில் துவங்கும் எம்.எல்.ஏ.,க்கள், சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை எதிர்பார்க்கலாம்.

 தாக்கு பிடிப்பாரா வீரமணி?
தமிழக அமைச்சரவையில், சட்டம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவி வகித்தவர்கள், பதவியை இழந்து, எம்.எல்.ஏ.,வாக மட்டும் தற்போது பதவி வகிக்கின்றனர்.தற்போது, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த வீரமணி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை ஐந்து முறை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாற்றப்பட்டுள்ளனர்.பதவியை காலிசெய்யும், "சென்டிமென்ட்' கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியில், வீரமணி நீடிப்பாரா? அல்லது வழக்கமான, "சென்டிமென்ட்' அவரை காலி செய்து விடுமோ? என அவரது ஆதரவாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

-நமது சிறப்பு நிருபர்-தினமலர்