பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா என்பதில் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் 2ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளன. 


ஆனால், அமாவாசை இணைந்து வரும் 3ம் தேதிதான் தீபாவளி என்று வட மாநில காலண்டர்களில் உள்ளது. அதன்படி மத்திய அரசு நிறுவனங்கள், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவித் துள்ளது. 3ம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் முன்னதாக இன்று வெள்ளி மற்றும் சனிக்கிழமை என 2 நாட்களுக்கு சேர்த்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளி பண்டிகை நாளான 2ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அந்த நாளில் பள்ளிகள் இயங்காது. இந்நிலையில், ஆண்டுக்கு 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவித்து கொள்ள அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம் உள்ளது. அதனால் உள்ளூர் விழாவை கருத்தில் கொண்டு  வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பது அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே எடுக்க வேண்டிய முடிவு. அரசோ, பள்ளி கல்வி துறையோ நவம்பர் 1ம் தேதி விடுமுறை அறிவிக்கவில்லை. எனவே 1ம் தேதி பள்ளிகள் இயங்கும் என் றனர். 

இந்நிலையில், வெளியூர் செல்வது, தீபாவளி பண்டிகைக்கான ஏற்பாடுகளை செய்வது, பண்டிகை பொருட்களை வாங்குவது போன்ற வேலைகள் பெற்றோருக்கு இருப்பதை கருத்தில் கொண்டு,  சில அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் 1ம் தேதியும் சேர்த்து விடுமுறை அறிவித்துள்ளனர். இந்த விடுமுறை உள்ளூர் விடுமுறையாக கருதப்பட்டு, பிறகு வேறு ஒரு நாளில் இந்த விடுப்பு ஈடு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல தனியார் பள்ளிகளை நடத்துவோர் மேற்கண்ட காரணங்களை கருத்தில் கொண்டு இன்று விடுமுறை அறிவித்துள்ளன.