உயர்கல்வி தரத்தை உயர்த்துவதற்கான ஆளுநர்களின் கூட்டம்

இந்திய உயர்கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள மாநில ஆளுநர்களின் கமிட்டி கூட்டம், முதல்முறையாக மும்பையில் நடைபெற்றது.

8 உறுப்பினர்களைக் கொண்ட மாநில ஆளுநர்களின் கமிட்டி, உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் பொருட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியால் அமைக்கப்பட்டது. இக்கமிட்டியின் தலைவராக மராட்டிய ஆளுநர் சங்கர நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

இக்கமிட்டியின் கூட்டம் அக்டோபர் 23ம் தேதி மும்பையில் நடத்தப்பெற்றது.இக்கமிட்டியில், மராட்டிய ஆளுநர் தவிர, பீகார், கேரளா, கோவா, ஹரியானா, டெல்லி, அந்தமான் நிகோபார் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மும்பையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில், பல்கலை துணை வேந்தர்களை நியமித்தல், பயிற்சியும், அனுபவமும் பெற்ற ஆசிரியர்கள் பற்றாக்குறை, மாணவர்களின் தரத்தை மேம்படுத்துதல், மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்குதல் மற்றும் ஆராய்ச்சிகளுக்கான உகந்த சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.


இந்த கமிட்டி தனது அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.