முதுகலை தமிழ்வழி படிப்பில் போலி சான்றிதழ்கள் : டி.ஆர்.பி., "பகீர்' தகவல்

முதுகலை, தமிழ்வழி படிப்பில், போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., "பகீர்' தகவலை வெளியிட்டுள்ளது. இதனால், தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்புகளில், 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, முந்தைய தி.மு.க., அரசு உத்தரவிட்டது. சமீபத்தில், 3,000 முதுகலை ஆசிரியர்கள், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டனர். இதில், தமிழ்வழி ஒதுக்கீட்டிற்கான,

தேர்வுப் பட்டியல் மட்டும் வெளியாகவில்லை.முதுகலையில், வரலாறு, வணிகவியல் மற்றும் புவியியல் ஆகிய மூன்று பாடங்களில் மட்டுமே, தமிழ்வழிப் பிரிவுகள் உள்ளன. இந்த பாடங்கள் உட்பட, வேறு சில பாடங்களையும், தமிழ் வழியில் படித்ததாக, ஏராளமான முதுகலை பட்டதாரிகள், டி.ஆர்.பி.,யிடம் விண்ணப்பித்துள்ளனர்.

உண்மையில், எந்தெந்த கல்லூரிகளில், முதுகலை, தமிழ்வழிப் பிரிவு பாடத் திட்டங்கள் உள்ளன என்ற விவரங்களை அறிய, அனைத்து பல்கலைகளுக்கும், டி.ஆர்.பி., கடிதம் அனுப்பி, விவரம் கேட்டது.தற்போது, ஒரு சில பல்கலைகள், டி.ஆர்.பி.,க்கு பதில் அளித்துள்ளன. அதில், "எங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், மேற்குறிப்பிட்ட பாடங்களில், தமிழ்வழிப் பிரிவு இல்லை' என, தெரிவித்துள்ளன.

இந்த பதிலைப் பார்த்து, டி.ஆர்.பி., அதிர்ச்சி அடைந்துள்ளது. மாணவர்கள் குறிப்பிட்டுள்ள பாடங்கள், சம்பந்தப்பட்ட பல்கலையில், தமிழ்வழிப் பிரிவு இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்துள்ளது. இதன் மூலம், தேர்வர்கள் சிலர், போலி சான்றிதழ்களை சமர்ப்பித்திருப்பதையும் கண்டுபிடித்துள்ளது.எனவே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டில், வேலை கோருவோரின் விண்ணப்பங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து, அதன் உண்மைத் தன்மையை அறிந்த பிறகே, தமிழ்வழி இட ஒதுக்கீட்டு பட்டியல் இறுதி செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், தமிழ்வழி தேர்வுப் பட்டியல் வெளியாவதில், சிக்கல் எழுந்துள்ளது.

- நமது நிருபர் -