ஒடிசாவில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கும் டீக்கடைக்காரர்


கட்டாக்: ஒடிசாவில், டீக்கடைக்காரர் ஒருவர் சுமார் 60 ஏழை 
                                                                
குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் கல்வி அளித்து வருகிறார்.
ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ். அங்குள்ள சேரிப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பதினொன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள பிரகாஷ், அதற்கு மேல் படிக்க வசதியில்லாததால் படிப்பை கைவிட்டு விட்டார். தற்போது டீக்கடை நடத்தி வரும் அவருக்கு படிப்பின் அருமை நன்றாக
தெரியும். அவர் டீக்கடை வைத்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். அன்றன்றைக்கு தொழிலுக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம். இதனால் அவர்களின் குழந்தைகள் படிக்க வசதியின்றி, தெருக்களில் சுற்றித்திரிவதைக் கண்டு வேதனையடைந்த பிரகாஷ், அவர்கள் படிப்பதற்காக சிறு பள்ளி ஒன்றை அமைத்துள்ளார். அதில் தற்போது 3ம் வகுப்பு வரை கல்வியளிக்கப்பட்டு வருகிறது. 3ம் வகுப்புக்கு மேல் குழந்தைகள் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க, பிரகாஷ் உதவி செய்து வருகிறார். இப்பள்ளியில் சுமார் 60 ஏழை குழந்தைகள் படித்து வருகின்றன. குழந்தைகளுக்கு கல்வியளிக்க 4 டீச்சர்களை நியமித்துள்ள பிரகாஷ், அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளமாக ரூ. 10 ஆயிரம் தந்து வருகிறார். மேலும், சம்பளம், மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்து மாதம் ஒன்றிற்கு அவருக்கு ரூ. 20 ஆயிரம் செலவாகி வருகிறது. இவை அனைத்தையும் தனது டீக்கடையிலிருந்து மட்டுமே எடுத்து செலவிட்டு வருகிறார் பிரகாஷ். தனது பள்ளிக்காக இதுவரை யாரிடம் பணஉதவி அவர் கேட்டதில்லை.

பிரகாஷின் பள்ளியில் படித்து வரும் ஜெயா என்ற சிறுமியின் தாய் கூறுகையில், "முன்பெல்லாம் குழந்தைகள் தெருக்களில் சுற்றித்திரிவார்கள். அவர்களில் சிலர் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனால் பிரகாஷ் பள்ளி ஆரம்பித்த பின் அவர்கள் அனைவரும் மாறி விட்டனர். இப்போது ஒழுங்காக பள்ளி செல்கின்றனர். இப்போது எனது இரு பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கனவு கண்டு வருகிறேன்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிரகாஷ் கூறுகையில், "தாய், தந்தையர்கள் பணிக்குச் சென்ற பின் அவர்களது குழந்தைகள் தெருவில் சுற்றித்திரிவது கண்டு மிகவும் மனவேதனை அடைந்தேன். தற்போது பள்ளி துவங்கியதும் அவர்களது பெற்றோர்களே குழந்தைகளை பள்ளிக்கு வந்து விடும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சமூக விரோத செயல்கள் செய்தவர்கள் தற்போது திருந்தி விட்டனர். எந்த ஒரு சிறார் சட்டமும் மாற்றங்களைக் கொண்டு வராது. ஒழுக்கக்கல்வியே குழந்தைகளிடம் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்றார். கல்விப்பணி மட்டுமல்லாமல், 50 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ள பிரகாஷ், அவசர காலத்தில் ரத்தம் தேவைப்படுவோருக்கு ரத்த தானமும் செய்து வருகிறார்.

இன்றைய சிக்கலான, குழப்பமான காலகட்டத்தில், அநேகம் பேர் மகிழ்ச்சியை வெளியில் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், அடுத்தவர்களுக்கு உதவி புரிவதிலேயே மகிழ்ச்சி இருக்கிறது என்பதை எளிதான வகையில் சுட்டிக்காட்டும் வகையில் வாழ்ந்து வரும் பிரகாஷ் ராவ் போன்றவர்கள் நமக்கு முன்னுதாரணமாக இருந்து வருகின்றனர்.