பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நாளை தொடக்கம்


தமிழகம், புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வுக்காக 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் தேர்வை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 746 மாணவியரும், 3 லட்சத்து 73 ஆயிரத்து 788 மாணவர்களும் அடங்குவர்.

கடந்த ஆண்டைவிட 43,559 பேர் இந்த ஆண்டு கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவர்களைத் தவிர 48,788 பேர் தனித்தேர்வர்களாக பதிவு செய்துள்ளனர். சென்னையில் 140 தேர்வு மையங்களில் 51,531 பேர் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் 23,717 பேர் மாணவர்கள், 27,814 பேர் மாணவியர் ஆவர்.

தேர்வு மையங்களில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, அவற்றை ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமானால் பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் பரிந்துரைக்கப்படும். கடந்த ஆண்டு பொதுத்தேர்வின்போது ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்ட 229 மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தேர்வுகளைக் கண்காணிக்க 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழிற்படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களான இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல் பாடத் தேர்வுகளின்போது வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக இருந்து தேர்வுகளை நடத்துவர்.