இளைஞர்கள் மத்தியில் இன்று விவசாயிகள் மீது கரிசனமும், விவசாயத்தின் மீது குறிப்பாக இயற்கை விவசாயத்தின் மீது விருப்பமும் ஏற்பட்டிருக்கிறது. நீண்ட நாள் ஆரோக்கியத்துக்கு இயற்கை விவசாயம்தான் உதவும் என்ற குரல் ஓங்கி
ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. அதில் ஒரு குரல் கரூரிலிருந்து கேட்கிறது. கரூர் மாவட்டம், வெள்ளியணையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 'இயற்கை விவசாய' செயல்பாடு நம்பிக்கை ஊற்றை நமக்குள் பொத்துவிடுகிறது.
இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம், சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைக் கொண்டு, பள்ளி வளாகத்தில் உள்ள அரை ஏக்கர் காலி இடத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வைக்கிறார். அந்தத் தோட்டத்தில் கத்தரி, வெண்டை, மிளகாய், வெங்காயம், பூசணி, முள்ளங்கி, பீர்க்கங்காய், சுரக்காய் உள்ளிட்ட காய்கறிகளையும், புதினா, புளிச்சக்கீரை, தூதுவளை, முடக்கத்தான், சிறுகீரை, வெந்தயக்கீரை உள்ளிட்ட கீரை வகைகளையும், மூங்கில், வெங்காயம் போன்ற செடிகளையும் வளர்த்து வருகிறார்கள். இவற்றை இயற்கை முறையில் விளைவிக்க, இலை, தழைகளைக் கொண்டு மாணவர்களே உரங்களைத் தயார் செய்கிறார்கள். கூடவே, மண்புழு உரமும் இவர்களால் தயாரிக்கப்படுகிறது. அவற்றைப் பயன்படுத்தி இந்த உணவுப் பயிர்களை வளர்ப்பதோடு இயற்கை பூச்சிவிரட்டிகள், பஞ்சகாவ்யம், ஆர்கானிக் உரங்கள் என்று இயற்கை உரங்களையே எல்லாவற்றிருக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். அதோடு, இந்தக் காய்கறி, கீரைச் செடிகளுக்குப் பள்ளியில் உள்ள தண்ணீர் டேங்கிலிருந்து சொந்தக் கைக்காசை செலவு செய்து, சொட்டுநீர்ப் பாசனம் மூலம் நீர்பாய்ச்ச குழாய் பதித்திருக்கிறார்கள். அவற்றில் விளையும் இயற்கை வழியிலான காய்கறிகளையும், கீரைகளையும் கொண்டு சமைத்த சத்துணவு சாப்பாட்டைத்தான் மாணவர்களுக்கு மதிய உணவாகத் தருகிறார்கள்.

வாசுகிஇதைப் பற்றி கேள்விப்பட்ட நாம், அந்த இயற்கை விவசாயக் காட்சிகளைக் காண நேரில் சென்றோம். அந்தத் தோட்டம் அமைந்திருக்கும் இடம் எங்கும் பச்சை பசேல். ஏகாந்தமாக இருந்தது. பள்ளி மாணவ, மாணவிகளோடு தலைமை ஆசிரியர் தர்மலிங்கமும் இதர ஆசிரியைகளும் களைபறித்துக் கொண்டும்,செடிகளிலிருந்து வெண்டைக்காய், பீர்க்கங்காய் போன்ற காய்களைப் பறித்துக் கொண்டும் இருந்தனர். ஆசிரியை வாசுகியிடம் பேசினோம்.
_12274.jpg)
"கடந்த ஆறு மாதமா இயற்கை முறையில் காய்கறி பயிரிட்டு வருகிறோம். முற்றிலும் இயற்கை முறையில், இயற்கை உரங்களைப் பயன்படுத்தி இப்படிக் காய்கறிகளை விளைவித்து வருகிறோம். மாணவர்களும் ஆர்வமாக இந்த இயற்கை விவசாயப் பணியில் ஈடுபடுறாங்க. கடந்த ஒருமாதத்திற்கு அனைத்துச் செடிகளிலும் காய்கள் காய்த்துப் பறிக்கும் பக்குவத்திற்கு வந்தது. அவற்றை பறித்துதான் உணவு சமைச்சு, மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறுறோம். அவர்களும்,'இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளில் சமைத்த சாப்பாடு நல்லா இருக்கு' ன்னு சாப்பிடுறாங்க" என்றார்
அடுத்து பேசிய இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தர்மலிங்கம்,
_12018.jpg)
"எங்க பள்ளி மாணவர்களுக்கு இயற்கை மீது ஆர்வம் வர வைப்பதற்கு இரண்டு வருடங்களாகப் பள்ளி வளாகத்தில் மரம் வளர்க்கும் தர்மலிங்கம்காரியத்தைச் செய்து வருகிறோம். அன்றாடம் உலகத்தில் நடக்கும் இயற்கை தொடர்பான
ஆக்கம் மற்றும் அழிவு நிகழ்வுகளைப் பற்றி மாணவர்களுக்கு விவரித்து, இயற்கையைக் காக்க வேண்டிய அவசியத்தை பற்றி எடுத்துக் கூறி வந்தோம். மாணவர்களுக்கு அதனால் இயற்கை குறித்து ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான், இந்தத் தோட்டத்தை அமைத்தோம். இதைத் தெரிந்துகொண்டு புழுதேரியில் உள்ள மத்திய அரசின் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகமும், வேளாண்மை மையமும் எங்களை ஊக்குவிச்சாங்க. அவர்களே எங்களுக்கு விதைகள், ஆர்கானிக் உரங்கள், பஞ்சகாவ்யம்ன்னு கொடுத்து, எங்க பள்ளி மாணவர்களின் இயற்கை வேளாண்மையை ஆர்வப்படுத்துறாங்க. இந்த மாணவர்களின் இயற்கை விவசாயத்தை ஆவணப்படுத்தும் விதமா, இயற்கை காய்கள் மகசூல் பதிவேடு ஒன்றை தயார் செய்து, அதில் தினமும் தோட்டத்தில் நடக்கும் செயல்கள், விளைந்த காய்கறிகளின் அளவு, அதில் சமைத்த உணவைச் சாப்பிட்ட மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை அப்டேட் செய்து வருகிறோம். மாணவர்களுக்குத் தொடர்ந்து இயற்கை மீது ஆர்வம் இருப்பதற்கு ஏதுவாக, தோட்டம் அமைந்திருக்கும் இடத்தில் உள்ள காம்பவுன்ட் சுவரில் 'நம் கரங்கள் இணைந்து பசுமைக்கு உதவட்டும்' என்று எழுதி வைத்துள்ளோம். இயற்கை உரங்களில் விளைந்த காய்கறிகளைச் சாப்பிடுவதால், எங்க பள்ளி மாணவர்கள் ஆரோக்கியமா இருக்காங்க. அதனால், மழை சீசன் முடிஞ்சதும் இந்தக் காய்கறித் தோட்டத்தின் அளவை ஒரு ஏக்கரா உயர்த்த இருக்கிறோம். அதில் விளையிற காய்கறிகளை வெள்ளியணை மக்களுக்கு மாணவர்களை வைத்து விற்பனை செய்யவிருக்கிறோம்" என்றார்.