TAM-NEWS

ஆசிரியர்களைக் குழப்பலாமா? "தமிழ் இந்து" நாளிதழ் கட்டுரைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

4.12.2017 அன்று வெளியான தமிழ் இந்து வணிக வீதி பகுதியில் புதிய ஓய்வூதியத் திட்டம் லாபமா? என்ற தலைப்பில் நீரை மகேந்திரன் அவர்கள் எழுதியிருந்தார்.

அதில் கட்டுரையின் தலைப்பிற்கும், கட்டுரையின் கருத்திற்கும் தொடர்பின்றி இருந்தது.

மேலும் புதிய ஓய்வூதியத் திட்டம் என்பதற்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு அறியாமல் கட்டுரை வெளிவந்தது புதிய ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதோடு மன வருத்தத்தையும் அளிக்கிறது.

புதிய ஓய்வூதியத் திட்டம் என்பது கடந்த 1.1.2004 முதல் மத்திய மற்றும் மாநில அரசில் புதிதாக பணியேற்பவருக்கு பொருந்தும்.

1.5.2009 முதல் இது அனைத்து குடிமக்களுக்கானத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இதை PFRDA ஆணையம் மூலம் நிதி மேலாளர்கள் நிர்வகித்து வருகின்றனர்.

ஆனால் தொழிலாளர் வருங்கால வைப்புநிதித் திட்ட ஓய்வூதியம் என்பது 1956 முதல் நடைமுறையில் உள்ள தொழிலாளர் நலத்திட்டமாகும். இதில் அவ்வப்போது சில மாற்றங்களுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.

இதனை EPFO என்ற அமைப்பு மூலம் இந்தியா முழுவதும் உள்ள மண்டல அலுவலகங்கள் வழியாக நிர்வகிக்கப்பட்டு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் இந்தியா முழுவதும் 4.7 கோடி தொழிலாளர்கள் இணைந்துள்ளனர்.

*அரசு ஊழியர்களைப் பொறுத்தமட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியம் என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை.*

மேலும், இதற்கான சட்டம் என்பது 19.9.2013 அன்றுதான் நிறைவேற்றப்பட்டது.

எனவே இக்கட்டுரை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கடுமையாகப் போராடி வரும் இச்சூழலில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களை தேவையற்ற குழப்பத்திற்குள் ஆழ்த்தியுள்ளது.


அதிக விழுக்காடு ஆசிரியர்கள் வாசிக்கும் தமிழ் இந்து நாளிதழில், கட்டுரை வெளியிடும் முன் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வெளியிட்டால் தேவையற்ற சச்சரவுகளை தவிர்க்கும்.

Related