அஞ்சலக சேமிப்பு உட்பட மேலும் 4 வகை சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயம்: மத்திய அரசு தடாலடி

டெல்லி: மேலும் 4 வகையான திட்டங்களுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆதார் அடையாள அட்டை இன்னும்
அனைவருக்கும் கிடைக்காத சூழ்நிலையில், பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் எண்ணை மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. ஆதார், அந்தரங்க உரிமையா என்ற வழக்கில், உச்சநீதிமன்றமே ஆதார் என்பது அந்தரங்க உரிமையை பாதிக்காத வண்ணம் இருக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. இந்த நிலையில், மேலும் 4 நடைமுறைகளுக்கு ஆதார் அடையாள எண்ணை கட்டாயமாக்கி மத்திய அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த சேவைகளுக்கு கட்டாயம் தபால்நிலையத்தில் வைத்திருக்கும் கணக்குகளில் பணத்தை முதலீடு செய்யவும், வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் போன்றவற்றுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது

டிசம்பர் வரை கெடு புதிதாக இந்த கணக்குகளை துவங்குவோர் ஆதார் எண்ணுடன் கணக்கு துவங்க வேண்டும் என்றும், ஏற்கனவே இவற்றில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

4 அரசாணைகள் பிறப்பிப்பு இது குறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம், தபால்துறை, வருங்கால வைப்பு நிதி, தேசிய சேமிப்புப் பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றுக்கு என தனித்தனியாக 4 அரசாணைகளை, அரசு பிறப்பித்துள்ளது.

விண்ணப்பித்த எண் தேவை ஒருவேளை ஆதார் எண் இல்லாத வாடிக்கையாளர்கள், தங்களது ஆதார் எண் கோரி விண்ணப்பித்த விண்ணப்ப எண்ணை பதிவு செய்யலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல சேமிப்பு திட்டங்களுக்காக அஞ்சலகங்களை பயன்படுத்துவோர் ஆதாரை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. ஏற்கனவே அனைத்து வங்கிகளும் ஆதார் எண்ணை கட்டாயப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தககது.Related