போட்டி தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த கல்வித்துறை இணை இயக்குநர்கள் 10 பேர் வெளிமாநிலங்களில் ஆய்வு

போட்டித் தேர்வுகளுக்கு தமிழக மாணவர்களை தயார்படுத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர்கள் 10 பேர் கொண்ட குழுவினர் வெளி
மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்துள்ளனர். மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நீட் மற்றும் ஐஐடி, ஜேஇஇ, ஐஐஎம் உட்பட நுழைவுத்தேர்வு மற்றும் வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதற்காக சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத்திட்டங்களுக்கு ஏற்ப தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மேலும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்கள் பிளஸ்-1 வகுப்பிலேயே நீட், ஐஐடி, ஐஐஎம், ஜேஇஇ தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி வருகின்றன. அதேபோல் தமிழக மாணவர்களை தயார்படுத்தும் வகையில் தமிழக கல்வித்துறையை சேர்ந்த இணை இயக்குநர்கள் 10 பேர் டெல்லி, கேரளா, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெலங்கானா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதன்படி, இணை இயக்குநர் நாகராஜமுருகன் டெல்லிக்கும், பொன்குமார் மகாராஷ்டிராவுக்கும், செல்வகுமார் குஜராத்துக்கும், குப்புசாமி ராஜஸ்தானுக்கும், குமார் தெலங்கானாவுக்கும், ரமேஷ் ஆந்திராவுக்கும், பாஸ்கர சேதுபதி கேரளாவுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இவர்கள் அங்குள்ள பாடத்திட்டங்கள் குறித்தும், போட்டித்தேர்வுகளுக்கு அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் அங்கு சிறப்பாக செயல்பட்டு வரும் தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையங்களையும் ஆய்வு செய்தனர். இவர்கள் தங்களது ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழக மாணவர்களை நீட் உட்பட போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் செயல்முறைகள் உருவாக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related